"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Half Wheel – அர்த்த சக்ராசனம்

Half Wheel Pose- அர்த்த சக்ராசனம்

Half Wheel Pose – அர்த்த சக்ராசனம். உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சிகளான யோகாசனப் பயிற்சிகளை நாம் தொடர்ந்து பல பதிவுகளாகப் பார்த்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பயிற்சியில் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சியான அர்த்த சக்ராசனத்தைப் (Ardha Chakrasana) பற்றித்தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

Half Wheel Pose girl

“அர்த்த” என்றால் சமஸ்கிருதத்தில் “பாதி” அல்லது “அரை” என்று பொருள். இந்த அர்த்த சக்ராசனத்தை (Ardha Chakrasana) பயிற்சி செய்யும்போது உடல் பார்ப்பதற்கு முழு வட்டமாக இல்லாமல் “பாதி வட்டம்” அதாவது அரை வட்ட சக்கரம்போல் காட்சி தருவதால் இதற்கு “அர்த்த சக்ராசனம்” (Ardha Chakrasana) என்று பெயர். அதனாலேயே இதனை ஆங்கிலத்தில் “பாதி வீல் போஸ் – Half Wheel Pose” என அழைக்கின்றனர்.

Half Wheel Pose – அர்த்த சக்ராசனம். மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு (practice for physical health Ardha Chakrasana) மிகவும் துணை நிற்பது இந்த “அர்த்த சக்ராசனம்” எனலாம்.

இது உடலுக்கு அதிக அளவில் நன்மை தரக்கூடிய ஆசனம்தான் என்றாலும் அதிவேகமாக இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய முற்பட வேண்டாம். நிதானமாகவும், மெதுவாகவும் இப்பயிற்சியை செய்யவும்.

வேகமாக செய்ய முற்பட்டால் வயிற்றுதசைகளும், முதுகு தசைகளும் பிடித்துக்கொள்ளும்.

இந்த பயிற்சியில் முதுகுப்பகுதி பின்பக்கமாக வட்டமாக வளைவதால் சிலருக்கு பயிற்சி செய்வது கடினமாக இருப்பதோடு பயிற்சியின் போது தலை கனமாக உணர்தல் அல்லது தலைசுற்றுதல் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டு நிதானம் தவறி ஒருபக்கமாக சாய்ந்து விழுந்துவிடவும் அதிக வாய்ப்புள்ளது.

எனவே, நிதானமாக பயிற்சியை மேற்கொள்ளவும்.

பெயர் – Ardha Chakrasana.

தமிழில் – அர்த்த சக்ராசனம்.

சமஸ்கிருதம் – Ardha Chakrasana.

ஆங்கிலம் – Half Wheel Pose.

வேறு பெயர்கள் –

ஆசனத்தின் நிலை – Supine, Arm Balances.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Back-Bend, Inversion, Strength, Balance.

வாருங்கள்.. அர்த்த சக்ராசனம் (Ardha Chakrasana) செய்து சக்தி பெறுவோம். உடலை வளைத்து உவகை கொள்வோம்…

Half Wheel Pose - Ardha chakrasana

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….

நான்காக மடித்து விரிக்கப்பட்டுள்ள ஜமுக்காளத்தின்மீது உடல் மற்றும் கால்களை தளர்வாக வைத்தபடி மல்லாந்து நேராக படுக்கவும்.

பின் இரு கால்களையும் மடக்கி இரு கால்களுக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி இருக்கும்படி பிருஷ்டத்தின் பக்கத்தில் வைத்து உள்ளங்கைகளை முறையே இரு காதுகளின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும். கைவிரல்களை பாதங்களை பார்த்திருக்கும்படி அமைக்கவும்.

பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டே இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை மேலே மெதுவாக தூக்கி உடலை அரைகோள வடிவில் கொண்டுவரவும்.

இப்போது உங்கள் இரு உள்ளங்கைகள் மற்றும் கால்களின் பாதங்கள் மட்டுமே தரையில் படித்த நிலையில் இருக்கும். எனவே கைகளும் கால்களும் உங்கள் உடல் எடையை சரிசமமாக தாங்கும்படி பார்த்துக்கொள்ளவும். இந்நிலையில் தலை கீழே தொங்கிய நிலையில் இருத்தல் வேண்டும்.

Half Wheel Pose step by step

இதே நிலையில் 10 லிருந்து 15 வினாடிகள் இருக்கவும். இயல்பாக சுவாசிக்கவும்.

பின் உடலை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு கொண்டுவரவும். சில வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் இப்பயிற்சியை செய்யவும்.

திரும்ப திரும்ப மூன்றிலிருந்து ஐந்து தடவை இப்பயிற்சியை செய்யவும்.

பயிற்சியின் பலன்கள்

ஆரம்பத்தில் சொன்னதுபோல இது மனதையும் உடலையும் உறுதி செய்யும் (Half Wheel Pose – Ardha Chakrasana) சிறப்பான ஆசனம்.

இப்பயிற்சியால் கால்கள், கைகள், மணிக்கட்டுகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து மேற்கண்ட உறுப்புகள் விசேஷ பலத்தை பெறுகின்றன. தோள்களும் கவர்ச்சியான தோற்றத்தை பெறுகின்றன. இப்பயிற்சியால் எலும்புகளும் வலு பெறுகின்றன.

இடுப்பு தசைகள் நன்கு பலம் பெறுவதொடு நெடுநாட்களாக உங்களை வாட்டிவந்த அஜீரண கோளாறுகளும், மலச்சிக்கலும் ஒழிந்துபோகும்… அதுமட்டுமா,.. தொடர்ந்து பயிற்சி செய்துவர தொப்பையும் தொலைந்து போகும்.

முதுகு தண்டிலுள்ள அத்தனை நரம்புகளும் தூண்டப்படுவதோடு முதுகெலும்பானது துவளும் தன்மையையும் பெறுவதால் நீடித்த இளமையைக் கொடுக்கும். முதுகு கூன் விழுந்திருந்தால் அதனையும் நிமிரச் செய்யும் திறன் படைத்தது.

இப்பயிற்சி வயிற்றுப்பகுதியில் சேரும் அதிகப்படியான சதை மற்றும் கொழுப்பு படிமத்தை கரைக்கிறது. உடலில் தங்கி நிற்கும் கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது.

இடுப்பு, வயிறு, பிருஷ்டம், தொடை ஆகியவற்றிலுள்ள தேவையற்ற சதைகளை கரைத்து உடலை அழகான வடிவத்திற்கு கொண்டுவருகிறது.

இதயம், நுரையீரல், மார்பு மற்றும் சுவாச சம்பந்தமான உறுப்புகள் அனைத்திற்கும் நன்கு பலம் சேர்ப்பதோடு சுவாசக்குழாய் பாதைகளை சுத்தப்படுத்தவும் இப்பயிற்சி பேருதவி புரிகிறது. இதனால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த ஒரு தீர்வாக அமையும்.

பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை சரிசெய்வதோடு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது.

குடல் இறக்கம் குணமாவதோடு சிறுநீரகத்திற்கும் புத்துணர்வூட்டுகிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால் தைராய்டு கோளாறுகளை நிவர்த்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்லதொரு வளர்சியை கொடுக்கும் சிறப்பான பயிற்சி இது.

முக்கிய குறிப்புகள்

இப்பயிற்சியை கண்டிப்பாக கழுத்து, முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்தல் கூடாது.

தலைவலி, தலைசுற்றல், குடலிறக்கம், உள்ளவர்கள் இப்பயிற்சியை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்களும் இதனை கண்டிப்பாக பயிற்சி செய்தல் கூடாது.

கண்நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்த்தல் வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள் கண்கள் சரியாகும் வரை இப்பயிற்சியை தவிர்த்தல் வேண்டும். கண் அழுத்த நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

இதயநோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தகுந்த பயிற்சியாளரின் மேற்பார்வையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

*******

எடுத்த எடுப்பிலேயே இந்த ஆசனத்தை செய்வது என்பது பலருக்கு கடினமானது. ஏனெனில் பலருக்கு இது மயக்கம், தலைசுற்றல் முதலிய அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அப்படியானவர்கள் “பிறையாசனம்” (Pirai Asana) என்று ஒன்று உள்ளது. அந்த பிறையாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்பு இந்த அர்த்த சிரசாசனத்தை செய்தால் மேற்குறிப்பிட்ட அசௌகரியங்களை தவிர்க்கலாம்.

பிறையாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா… தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) மீது ஒரு தட்டு தட்டுங்கள்… மூன்றாம் பிறையை மட்டுமல்ல… முழு சந்திரனையே பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!