"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Savasana – சவாசனம்

யோகாசனப் பயிற்சியில் மிகமிக முக்கியமான ஆசனம் இந்த Savasana – சவாசனம் ஆகும்.

ஏனெனில், யோகாசனப் பயிற்சியை முடித்தவுடன் கடைசி ஆசனமாக கண்டிப்பாக ”சவாசனம்” (Savasana) செய்யப்படவேண்டும். இது மிகமிக முக்கியம்.

சமஸ்கிருதத்தில் ”சவம்” என்றால் “உயிரற்ற உடல்” என்று பொருள். அதாவது இந்த ஆசனத்தில் பிணம்போல் உடலை தளர்வாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல் வைத்து படுத்திருக்க வேண்டுமாதலால் “சவாசனம்” (Savasana) எனப்பெயர் பெற்றது. இது உடலை சாந்தப்படுத்துவதால் இதனை “சாந்தி ஆசனம்” (Santhiyasana) எனவும் அழைக்கின்றனர்.

Continue the practice for - Savasana-Santhiyasana-g

நாம் இந்த பதிவில் சவாசனம் என அழைக்கப்படும் “சாந்தி ஆசனம்” பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

பெயர் – Savasana

தமிழில் – சவாசனம் – சாந்தி ஆசனம்.

சமஸ்கிருதம் – Savasana.

ஆங்கிலம் – Corpse Pose.

வேறுபெயர்கள் – Santhiyasana.

ஆசனத்தின் நிலை – Relax and Restorative, Meditative.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Supine.

Continue the practice for - Savasana-Santhiyasana.

யோகாசனம் செய்யும் நீங்கள் இறுதி ஆசனமாக சவாசனம் செய்யாமல் பயிற்சியை முடித்தால் நீங்கள் இதுவரை செய்த மொத்த பயிற்சியும் வீண் என்பதைப் புரிந்து கொள்ளவும். எனவே கடைசி பயிற்சியாக சவாசனத்தை கண்டிப்பாக செய்யவும்.

கடைசி ஆசனமாக சவாசனம் ஏன் செய்யவேண்டுமெனில் நாம் வரிசையாக சில ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்திருப்போம் அல்லவா… இதனால் உடலின் சில உறுப்புகள் சோர்வைடைந்து இருக்கலாம்.. அதீத பயிற்சியால் நரம்புகள் தளர்வடைந்து இருக்கலாம். தசைகள், மூட்டு பிணைப்புகள் இறுக்கமடைந்து இருக்கலாம்..

சோர்வு, தளர்வு, இறுக்கம், தசைபிடிப்பு முதலியவைகளிருந்து உடலை விடுபட செய்தால்தான் உடலும், மனமும் புத்துணர்ச்சியடையும்… பக்கவிளைவுகளிலிருந்தும் தப்பிக்கமுடியும்… ஆசனப்பயிற்சியால் கிடைக்கும் முழு பலன்களை கூட பெற முடியும். இல்லை என்றால் தசைபிடிப்பு, மூட்டுவலி, பயிற்சியில் ஆர்வமின்மை போன்ற பல பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிவரலாம்.

எனவே யோகாசனப் பயிற்சி முடிந்த உடன் கடைசி ஆசனமாக “சவாசனம்” செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

இனி “சவாசனம்” என அழைக்கப்படும் “சாந்தி ஆசனத்தை” பயிற்சி செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்.

விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை நேராக நீட்டி லேசாக அகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மேற்புறம் பார்த்திருப்பதுபோல கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைக்கவும்.

உடம்பின் எந்த ஒரு உறுப்பையும் விறைப்பாக வைக்காமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் செத்த பிணம் போல் கிடக்க வேண்டும்.

இந்த பயிற்சிக்காக சுவாசத்தை ஆழமாக இழுத்து விடுவதோ அல்லது தம் பிடித்து அடக்கி வைப்பதோ கூடாது. நீங்கள் சாதாரணமாக இருக்கும்போது சுவாசம் உங்களுக்கே தெரியாமல் எப்படி இயல்பாக நடக்குமோ அப்படி இயல்பாக விடுங்கள்.

குறிப்பாக மனதில் எந்த வித எண்ணங்களும் இல்லாமல் நார்மலாக படுத்திருக்கவும். அதாவது மனது மற்றும் உடல் இரண்டும் Relax ஆக இருக்கவேண்டும்.

மனதில் எந்தவித எண்ணங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது சாத்தியமில்லை என்பதால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சுத்த இரத்தம் பரவுவதாகவும் அனைத்து உறுப்புகளும் பலம்பெற்று வருவதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

10 நிமிடம் முதல் 20 நிமிடம்வரை இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

இந்த ஆசனமானது ஆழ்ந்த தூக்கத்தை தரவல்லது. ஆதலால் பலபேர் அப்படியே நிம்மதியாக தூங்கிவிடுகிறார்கள். எனவே விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

ஆசனங்களிலேயே மிகவும் சுகமான இன்பகரமான ஆசனம் ஒன்று உண்டு என்றால் அது இந்த ஆசனம்தான். அனுபவித்து பார்த்தவர்களுக்கே அது புரியும். (பின்ன இருக்காதா.. காலை அகட்டி வச்சுக்கிட்டு மல்லாக்க விட்டத்த பாத்துக்கிட்டு தூங்குறதுன்னா சும்மாவா).

Continue the practice for - Savasana-Santhiyasana. vadivelu Savasana.

ஆசனபயிற்சியின்மூலம் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சில விறைப்பான தன்மை அடைந்திருக்கலாம். அதை அப்படியே விடும் பட்சத்தில் சுளுக்கு, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகளை வருவிக்கலாம்.

எனவே பயிற்சியின் முடிவில் இந்த சவாசனத்தை செய்து உடம்பின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் விறைப்பு தன்மையை நீக்கி தளர்வடைய செய்வதால் அனைத்து உறுப்புகளுக்கும், நரம்பு மண்டலங்களுக்கு சுத்த இரத்தம் சீராக பாய்ந்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதுடன் உடலையும் வலுப்படுத்துகிறது. உடலின் அத்தனை நரம்புகளும், உறுப்புகளும் செப்பனிடப்படுகின்றன.

சுவாசம் மற்றும் இருதய செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

பதட்டம், இரத்த அழுத்தம், தூக்கமின்மையையும் நீக்குகின்றன.

”யோகாசனப் பயிற்சி” அல்லது ”சூரியநமஸ்காரம்” செய்பவர்கள் பயிற்சி முடிந்தவுடன் கடைசிப் பயிற்சியாக ”சவாசனம்” கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். அப்படி செய்யாமல் விட்டால் இதுவரையில் நீங்கள் செய்த பயிற்சியின் முழு பலன்களும் கிடைக்காதது மட்டுமல்ல, உடல்வலி, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

யோகாசனப் பயிற்சியை கடினமான பயிற்சிகள் மற்றும் எளிதான பயிற்சிகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம். இந்த தளத்தில் நீங்கள் எளிதாக பயிற்சி செய்யக்கூடிய பல யோகா பயிற்சிகள் இடம்பிடித்துள்ளன.

  • பாலாசனம்
  • சிசுபாலாசனம்
  • வீரபத்ராசனம்
  • திரிகோணாசனம்

முதலியன அவைகளுள் சில.

மேற்குறிப்பிட்டுள்ள எளிய ஆசனங்களை அந்தந்த பக்கங்களுக்கு சென்று பார்வையிடவும். அவைகளுக்கான விஷீவல் லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை ஓசைபடாமல் தட்டி உள்ளே நுழையுங்கள்….

>> பாலாசனம் – Balasana <<

>> சிசுபாலாசனம் – Shishupalasana <<

>> வீரபத்ராசனம் – Virabhadrasana <<

>> திரிகோணாசனம் – Trikonasana <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக சுவாசம் மற்றும் இருதய செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

பதட்டம், இரத்த அழுத்தம், தூக்கமின்மையையும் நீக்குகின்றன என பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “தூக்கமின்மை” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!