"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Trikonasana – திரிகோணாசனம்

Trikonasana – திரிகோணாசனம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப நோயில்லா சுக வாழ்வு வாழ வேண்டுமென்றால் நமக்கு முதலில் தேவை பிணியில்லா ஆரோக்கியமான உடல்.

உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது, அதில் உறுதியும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும்

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலிலுள்ள அத்தனை நாடிநரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலிலுள்ள அத்தனை நரம்பு மண்டலங்களும் சுறுசுறுப்பாக இயங்கினால் மட்டுமே அந்த உடலில் நிரந்தரமாக ஆரோக்கியமும் அமைதியும் குடி கொள்ளும். அதற்கு தேவை முறையான பயிற்சி. ஆம்,… மூச்சுப்பயிற்சியுடன் கூடிய யோகப்பயிற்சி.

நமக்கு நல்வழி காட்டிய தீர்க்கதரிசிகளான சித்தர்கள் நமக்களித்த வற்றாத இரு ஜீவநதிகளே மூச்சு பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும்.

Continue the practice for - Trikonasana  step

மனித உடலும், உள்ளமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் இந்த இரு பயிற்சிகள்.

இதில் மூச்சு பயிற்சியானது நீண்ட ஆயுளையும், யோகாசனப் பயிற்சியானது அற்பமாக இருக்கும் நம் உடலை சிற்பமாக செதுக்கும் திறனையும்கொண்டது.

இந்த பதிவில் உடலை என்றும் சுறுசுறுப்பாகவும், சுகமாகவும் இயங்கச் செய்யும் ”திரிகோணாசனம்” (Trikonasana) என்னும் பயிற்சியைப்பற்றிதான் பார்க்க இருக்கின்றோம்.

பெயர் – Trikonasana.

தமிழில் – திரிகோணாசனம்.

சமஸ்கிருதம் – Trikonasana.

ஆங்கிலம் – Triangle Pose.

வேறுபெயர்கள் –

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Side-Bend, Stretch.

“திரி கோணம்” என்றால் மூன்று மூலைகளைக் கொண்ட ஒரு கோண அமைப்பைக் குறிப்பது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் “திரி கோணம்” என்றால் “முக்கோணம்” என்று பொருள். “ஆசனம்” என்றால் “இருக்கை” என்று பொருள். இந்த ஆசனத்தில் நம் உடல் முக்கோணம் போன்று அமைவதால் இதற்கு “திரிகோணாசனம்” என்று பெயர்.

இந்த ஆசனத்தின் பெருமையை இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றை சொல்லலாம்.

இளமை…

துள்ளும் இளமை…

அதுவும் அழகு ததும்பும் துள்ளும் இளமை…

ஆம்,… இந்த திரிகோணாசனம் உங்களை அழகு நிறைந்த மிடுக்குடனும், இளமை துள்ளும் நடைகளுடனும் எப்போதும் இளமையாகவே வைத்துக்கொள்ளும்.

இந்த அற்புதமான ஆசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம் வாருங்கள்…

Trikonasana – திரிகோணாசனம் – செய்முறை

உடலை வளைக்காமல் நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

அதன் பின் இரு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு விரித்து வைக்கவும். பின் இரு கைகளையும் தோளுக்கு நேராக பக்கவாட்டில் நீட்டவும்.

Continue the practice for - Trikonasana yoga-triangle

அதன் பின் இடதுகை பக்கம் பக்கவாட்டில் இடுப்பை வளைத்து இடது கை விரல்களால் இடது பாதத்தின் அருகில் தரையை தொடவும். அதேவேளையில் உங்கள் வலது கை வளையாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்கள் பார்வையும் வலது கை விரல்களின் நுனியை பார்த்தபடி இருக்கவும்.

இதே நிலையில் 10 முதல் 20 வினாடிகள் நிற்கவும். பின் நேராக நிமிர்ந்து வலது பக்கமும் இதேபோல் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் ஒருதடவை இந்த ஆசனத்தை செய்து முடித்துள்ளீர்கள். சில விநாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் இடது மற்றும் வலது பக்கம் முன்போல் செய்யவும். இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை அவசரப்படாமல் நிதானமாக பயிற்சி செய்யவும்.

இதை தொடர்ந்து பயிற்சி செய்துவர இடுப்புக்கு வலிமை கூடுகிறது. தொடை எலும்பு, முதுகெலும்புகளுக்கு வலிமை அதிகரிக்கிறது. தோள்கள், மார்பு, முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.

அடிவயிற்றிலுள்ள அனைத்து உள்ளுறுப்புகளும் பலம் பெறுகிறது. அதோடு வாய்வுக் கோளாறுகளையும் நீக்குகிறது.

மேலும் இப்பயிற்சியால் முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி (Shoulder Pain) முதலியன நீங்கும். முதுகெலும்பிற்கு நெகிழும் தன்மையை கொடுத்து இளமையை மீட்டுத்தரும்.

விளையாட்டு வீரர்களுக்கும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதம் எனலாம். அந்த அளவிற்கு இது கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது.

தொந்தி கணபதியை நினைவில் கொண்டுவரும் உங்களின் பருத்த தொப்பையும் இது பழனியாண்டியை நினைவுபடுத்தும் அளவிற்கு குறைக்கிறது. அதோடு நின்றுவிடாமல் உங்கள் இடுப்பு சதையையும் கரைத்து உங்களை எப்போதும் ”ஸ்லிம்” மாகவே வைத்துக்கொள்கிறது..

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இதனை செய்ய வேண்டாம். குழந்தை பெற்றபின் 1 வருடம் வரையில் இந்த பயிற்சியை தாய்மார்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

கழுத்து, தோள்பட்டை, முழங்கால் மற்றும் கணுக்கால்களில் காயம் உள்ளவர்களும், இடுப்பு, முதுகு ஆகியவைகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் இந்த பயிற்சியை செய்தல் கூடாது. தலைசுற்றல், ஒற்றை தலைவலி மற்றும் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும்.

மிகவும் மெலிந்த பலவீனமான உடல்வாகு உடையவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக இதை தொடர்ந்து பயிற்சி செய்துவர இடுப்புக்கு வலிமை கூடுகிறது. தொடை எலும்பு, முதுகெலும்புகளுக்கு வலிமை அதிகரிக்கிறது. தோள்கள், மார்பு, முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.

வாய்வுக் கோளாறுகளையும் நீக்குகிறது.

மேலும் இப்பயிற்சியால் முதுகுவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி (Shoulder Pain) முதலியன நீங்கும் என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கர்ப்பிணி பெண்களும் குழந்தை பெற்ற தாய்மார்களும் இதனை செய்தல்கூடாது.

கழுத்து, தோள்பட்டை, முழங்கால் மற்றும் கணுக்கால்களில் காயம் உள்ளவர்களும், இடுப்பு, முதுகு ஆகியவைகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

தலைசுற்றல், ஒற்றை தலைவலி மற்றும் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “வாய்வுக் கோளாறு” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல…. நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

One thought on “Trikonasana – திரிகோணாசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!