"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Parsva Uttanasana – பார்சவ உத்தனாசனம்

Parsva Uttanasana – பார்சவ உத்தனாசனம். நாம் நலமுடன் வாழவேண்டுமெனில், ஆரோக்கியமாக திகழ வேண்டுமெனில் உடலுக்கு வெறும் உணவு மட்டும் இருந்தால் போதாது உடலுக்கு நிலையான பராமரிப்பும், முறையான உடற்பயிற்சியும் மிகமிக அவசியம்.

அவ்வாறான உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும்கூட ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் தருவதாக இருத்தல் வேண்டும்.

இதை கருத்தில்கொண்டே நம் முன்னோர்கள் உடலுக்கும், மனதிற்கும் பயிற்சி தரக்கூடிய “யோகாசனம்” (yogasana) என்னும் அற்புத வழிமுறையை நமக்கு வகுத்துத் தந்துள்ளனர்.

Parsva Uttanasana.

பொதுவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன என்றாலும் இவற்றில் பயிற்சி செய்வதற்கு கடினமாக உள்ள ஆசனங்களும் நிறையவே உள்ளன.

ஆம், பருமனான உடலை கொண்டவர்களால் சில கடினமான குறிப்பாக உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்ய முடிவதில்லை.

ஆகவே, அப்படியானவர்கள் பயிற்சி செய்வதற்கு எளிமையான சில ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சியில் ஈடுபடலாம்.

அதை விடுத்து கடினமான ஆசனங்களை செய்ய முற்பட்டால் உடலில் பல விரும்பத்தகாத பிரச்சனைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

எனவே, தொடர்ந்து சில மாதங்கள் எளிதான ஆசனங்களை செய்து உடல் நன்கு துவளும் தன்மையை பெற்றபின்பு கடினமான ஆசனங்களை செய்ய முற்படலாம்.

பயிற்சி செய்வதற்கு எளிமையான Parsva Uttanasana – பார்சவ உத்தனாசனம் என்னும் ஆசனத்தைப் பற்றித்தான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

“உத்தனாசனம்” (Uttanasana) என்னும் பயிற்சியை பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். உத்தனாசனம் என்பது நேராக நின்று கொண்டு உடலை முன்னோக்கி வளைப்பதைக் குறிக்கும்.

உத்தனாசனத்தைப்போல இப்பயிற்சியிலும் உடல் முன்னோக்கிதான் வளைக்கப்படுகிறது என்றாலும் அப்பயிற்சியிலிருந்து இது சிறிய அளவிலான மாற்றத்தைக் கொண்டுள்ளது.

Parsva Uttanasana. girl

இரு கால்களையும் சேர்த்து வைப்பதற்கு பதிலாக இரண்டடி முன்னும் பின்னுமாக வைத்தபடி உடலை முன்னோக்கி வளைப்பதால் இது “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) என பெயர் பெறுகிறது. இதனை ஆங்கிலத்தில் “Intense Side Stretch Pose” எனவும் குறிப்பிடுகின்றனர். இதன் வடிவத்தை பொறுத்து இதனை ”பிரமிடு போஸ்” (Pyramid Pose) எனவும் அழைக்கின்றனர்.

இதனை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம் வாருங்கள்.

பெயர் – Parsva Uttanasana.

தமிழில் – பார்சவ உத்தனாசனம்.

சமஸ்கிருதம் – Parsva Uttanasana.

ஆங்கிலம் – Side Forward Fold Pose.

வேறுபெயர்கள் –

  • Pyramid Pose.
  • Single Leg Forward Bend.
  • Sideways Facing Forward Bend.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Forward Bend, Twist.

பொதுவாக அது எந்தவகையான ஆசனமாக இருந்தாலும் அதிவேகமாக இந்த ஆசனங்களை பயிற்சி செய்ய முற்பட வேண்டாம். இது உடற்பயிற்சி அல்ல. யோகசனப் பயிற்சி என்பதனை நினைவில் கொள்ளவும். எனவே, பரபரப்பில்லாமல் நிதானமாகவும், மெதுவாகவும்தான் யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேகமாக செய்ய முற்பட்டால் வயிற்றுதசைகளும், முதுகு தசைகளும் பிடித்துக்கொள்ளும்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்….

Parsva Uttanasana – பார்சவ உத்தனாசனம். முதலில் ஒரு கெட்டியான விரிப்பின்மேல் இரு கால்களையும் சேர்த்து வைத்தபடி நேராக நிற்கவும்.

பின் வலதுகாலை இடது காலில் இருந்து ஒரு இரண்டடி தூரம் இருக்கும்படி முன்னோக்கி நகர்த்தி வைக்கவும்.

இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று முழங்கைகளை மடக்கி கட்டிக்கொள்ளலாம் அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல முதுகின் பின்னால் வைத்துக்கொள்ளலாம்.

Parsva Uttanasana. Mutra

அதன்பின் மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து வலது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி நிற்கவும்.

பின் மெதுவாக நிமிர்ந்து கால்களை மாற்றி பயிற்சி செய்யவும்.

Side Forward Fold Pose
Side Forward Fold Pose 2

அதாவது வலது காலுக்கு பதிலாக இடதுகாலை முன்னோக்கி நகர்த்தி வைத்து இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கொண்டுசென்று முழங்கைகளைக் கட்டிக்கொண்டோ அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல வைத்துக்கொண்டோ முன்போல மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து இடது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி இருக்கவும்.

Side Forward Fold Pose 3

இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 3 முதல் 5 தடவை பயிற்சி செய்யவும்.

இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) பயிற்சியை தொடர்ந்து பயின்றுவருவதால் முதுகு, இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதோடு அவைகளுக்கு வலிவையும் தருகின்றன.

மேலும், முதுகெலும்புகளுக்கு வலிவை தந்து நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன.

கழுத்து, தோள்பட்டை, முழங்கை, தொடை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளையும் களைகின்றன.

வயிற்றின் உள்ளுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதனை தொடர்ந்து பயிற்சி செய்துவர மனதை அமைதிப்படுத்துகிறது.

கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு இவைகளில் வலிகள் இருந்தால் இதனை பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

கணுக்கால் பகுதிகளில் வலி அல்லது கடுமையான காயம் இருந்தாலும் இதனை பயிற்சி செய்ய முன்வர வேண்டாம்.

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குடல் இறக்கம் உள்ளவர்கள் இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், இதய நோயினால் பாதிப்புக்கு உள்ளானவர்களும் திறமையான பயிற்சியாளர்களின் முன்னிலையிலேயே பயிற்சி செய்தல் வேண்டும்.

உத்தனாசனம் – Uttanasana

நாம் “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) பற்றி முழுமையாக அறிந்துகொண்டோமல்லவா… இந்த ஆசனத்திலிருந்து சிறிது மாறுபட்ட கோணத்தில் “உத்தனாசனம்” (Uttanasana) என்னும் ஒரு ஆசனமும் உள்ளது. பார்ஸ்வ உத்தனாசனத்தைப்போல இப்பயிற்சியிலும் உடல் முன்னோக்கிதான் வளைக்கப்படுகிறது என்றாலும் அப்பயிற்சியிலிருந்து இது சிறிய அளவிலான மாற்றத்தைக் கொண்டுள்ளது.

பார்ஸ்வ உத்தனாசனத்தில் இரு கால்களையும் இரண்டடி முன்னும் பின்னுமாக வைத்தபடி இடுப்பை சிறிது திருப்பி உடலை முன்னோக்கி வளைக்கின்றோம். ஆனால், உத்தனாசனத்தில் கால்கள் இரண்டும் சேர்த்து வைக்கப்படுகிறது. கால்கள் இரண்டும் சேர்த்து நேராக நின்று கொண்டு உடல் முன்னோக்கி வளைக்கப்படுகின்றது.

சரி, உங்களுக்கு இப்போ லட்டு தின்ன ஆசையா… சாரி… “உத்தனாசனம்” செய்ய ஆசையா… அப்போ கீழே உள்ள பேனரில் உங்களின் பஞ்சு போன்ற பிஞ்சு விரல்களால் பேனர் நஞ்சு போகாதபடிக்கு மொள்ளமா ஒரு தட்டு தட்டுங்க….

>> உத்தனாசனம் – Uttanasana <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பார்சவ உத்தனாசனம் பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முதுகு, இடுப்பு, கழுத்து, தோள்பட்டை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன என பார்த்தோம். வயிற்றின் உள்ளுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது எனவும் பார்த்தோம்.

அதோடு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளையும் களைகின்றன எனவும் பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் “கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, கணுக்கால் இவைகளில் வலிகள் இருந்தால் இதனை பயிற்சி செய்தல் கூடாது.

மேலும்,… குடல் இறக்கம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த பயிற்சியினை தவிர்க்க வேண்டும் எனவும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “குடல் இறக்கம்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

One thought on “Parsva Uttanasana – பார்சவ உத்தனாசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!