"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Siddhasana – சித்தாசனம்

சித்தி என்றால் வெற்றி. சித்தம் என்றால் மனம். இந்த (Siddhasana – சித்தாசனம்) பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் பிரம்மச்சரியத்தில் எளிதாக மனம் நிலைபெற்று யோகம் விரைவாக கைகூடி வெற்றி பெறுவதால் இது “சித்தாசனம்” என பெயர் பெற்றது.

மிக பழமையான ஆசனங்களில் சித்தாசனமும் ஒன்றாகும்.

Siddhasana

10 ம் நூற்றாண்டின் தொடக்ககால நூலான “கோரக்ஷ சதகத்தில்” இது ஒரு பத்மாசனத்திற்கு இணையான தியானத்திற்கான சிறப்பான இருக்கையாகக் கூறப்பட்டுள்ளது.

15 ம் நூறாண்டில் இயற்றப்பட்ட “ஹடயோக பிரதீபிகா” வும் இந்த சித்தாசனத்தின் சிறப்புகளை விவரிக்கிறது. சித்தாசனத்தில் தேர்ச்சி பெற்றபின் வேறு எந்த ஆசனமும் தேவையில்லை என்று கூறுகிறது.

ஏனென்றால், இது பிரம்மச்சரியத்திற்கு உங்களை அழைத்து செல்வதில் முதன்மையானதாக செயல்பட்டு முக்தியின் கதவை திறந்து மோட்சத்தில் உங்களை அமரவைப்பதாகவும் அது கூறுகிறது.

17 ம் நூற்றாண்டின் “கெரண்ட சம்ஹிதை” (Gheranda Samhita) என்னும் யோக நூலும் ஆசாபாசங்களில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் விடுதலைக்கு இந்த சித்தாசனம் பேருதவி புரிவதாக கூறுகிறது.

பெயர் – Siddhasana

தமிழில் – சித்தாசனம்.

சமஸ்கிருதம் – Siddhasana.

ஆங்கிலம் – Accomplished Pose, Perfect Pose.

வேறுபெயர்கள் – சமாசனம்

ஆசனத்தின் நிலை – Seated.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Meditative.

சரி, இந்த சித்தாசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்க்கலாம் வாருங்கள்…

Siddhasana – சித்தாசனம் – பயிற்சிமுறை

முதலில் ஒரு கெட்டியான விரிப்பில் கால்களை நீட்டி உட்காரவும்.

பின் இடதுகாலை மடித்து குதிகால் குதத்தின் (ஆசனவாய்) பக்கத்தில் இருக்கும்படி நெருக்கி வைக்கவும்.

பின் வலதுகாலை மடித்து இடதுகாலின் மீது வைத்து வலது குதிகால் இனப்பெருக்க உறுப்பை அழுத்தி இருக்கும்படி நெருக்கி வைத்துக்கொள்ளவும்.

அதாவது, இடது குதிகால் மீது வலது குதிகால் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

தொடை, முழங்கால் ஆகியவை தரையில் படிந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Accomplished Pose - Siddhasana

கைகள் இரண்டையும் முழங்கால்மீது “சின்முத்திரை” பிடித்தபடி வைக்கவும். அல்லது இரண்டு உள்ளங்கைகளும் மேல்நோக்கி இருக்கும்படி இடது உள்ளங்கைமீது வலதுகையை அல்லது வலது உள்ளங்கை மீது இடது உள்ளங்கையை வைத்து “பைரவி முத்திரை” பிடித்து மடிமீது வைத்துக்கொள்ளலாம்.

இடுப்பு, முதுகு, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும்.

மூச்சை நன்கு இழுத்து மெதுவாக ஒரே சீராக சுவாசிக்கவும்.

2 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.

தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம்.

பயிற்சின் பலன்கள்

பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெறுகிறது. மூட்டு வலிகள் நீங்குகிறது.

நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பை நேராக்க உதவுகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் கால்வலி, முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. இதனால் முகம் பொலிவு பெறுகிறது.

தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. இந்த பயிற்சியால் அலைபாயும் மனம் அமைதி அடைகிறது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

சமாசனம்

இந்த சித்தாசனத்தை “சமாசனம்” என்றும் குறிப்பிடுகிறார்கள். சமஸ்கிருதத்தில் “சமா” என்றால் “சமம்” அல்லது “சமநிலை” என்று பொருள்.

சமாசனத்தை தமிழில் சொல்லவேண்டுமென்றால் “சம ஆசனம்” என்று சொல்லலாம்.

இந்த பயிற்சியில் இரண்டு குதிகால்களும் குதம் (ஆசனவாய்) இனப்பெருக்க உறுப்பு, தொப்புள் என்ற நேர்கோட்டில் அமைந்து உடலை இரு சமபாகமாக பிரிக்கிறதல்லவா அதனால் இதற்கு “சமாசனம்” (சம ஆசனம்) என்று ஒரு பெயரும் வழங்கப்படுகிறது.

யோக சாஸ்திரத்தில் சமாசனத்தை பற்றிய குறிப்பு மிக குறைவாகவே காணப்படுகின்றன. எனவே இந்த “சமாசனம்” எந்த ஆசனத்தின் மறுபெயர் என்ற குழப்பம் நெடுங்காலமாகவே நீடித்து வருகிறது.

சிலர் ஸ்வஸ்திகாசனத்தின் இன்னொரு பெயர்தான் சமாசனம் என வாதிடுவதும் உண்டு. ஆனால் ஸ்வஸ்திகாசனத்தைவிட இந்த சித்தாசனமே ஆசனவாய், இனப்பெருக்க உறுப்பு, தொப்புள் என்ற நேர்கோட்டில் சமமாக உடலை பிரிப்பதால் சித்தானத்தின் மற்றொரு பெயரே சமாசனம் எனவும் குறிப்பிடுவதுண்டு.

எது எப்படியோ சமாதானத்தை கடைப்பிடித்து சித்தம் கலங்காமல் சித்த சுத்தியோடு இந்த சித்தாசனத்தை பயிற்சி செய்து நலம் பெறுவோம்.

குறிப்பு

முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

விதைவாதம், விதைவீக்கம், விரைப்பை நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த சித்தாசனப் பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முழங்கால், முதுகெலும்பு வலுப்பெறுகிறது. நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. முதுகெலும்பை நேராக்குகிறது. உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது. கால்வலி, மூட்டு வலி, முதுகுவலி குணமாகிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது. விதைவாதம், விதைவீக்கம், விரைப்பை நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “விதைவாதம்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!