"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Shishupalasana – சிசுபாலாசனம்

Shishupalasana – சிசுபாலாசனம். ”சிசு” என்றால் குழந்தை என்று பொருள். ”சிசுபாலாசனம்” (Shishupalasana – Hindolasana) என்றால் குழந்தையை தாலாட்டுவது போன்ற பாவனையில் இருப்பது என்று பொருள்.

தாலாட்டக்கூடிய ஆசனம் என்பதால் ஆண்கள் இந்த ஆசனத்தை செய்யாமல் தவிர்த்து விடாதீர்கள். குழந்தையை பெண்கள்தான் தாலாட்ட வேண்டுமென்பது இல்லை. ஆண்களும் தாராளமாகத் தாலாட்டலாம்.

ஆனால்,… ஒரே ஒரு கண்டிஷன்… தாலாட்டு பாட்டு வெளியே கேட்காதபடிக்கு அதிலும் முக்கியமாக குழந்தைக்கு கேட்காதபடிக்கு தாலாட்ட வேண்டும். ஏனென்றால்,… காண்டாமிருகம் வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு பயத்தில் தொட்டிலில் கிடக்கும் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டால்… அப்புறம் கர்லாக்கட்டை சுற்றும் உங்களுக்கு பூரிக்கட்டையால்தான் பூஜையே நடக்கும்…

இன்னா… நைனா.. நான் சொல்லுறது புரியுதுதானே!!…

எனவே,.. இந்த சிசுபாலாசனத்தை ஆண், பெண் இருவருமே குழந்தையை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் பயிற்சி செய்யலாம். ஆனால்,… பெண்கள் மட்டுமே தாலாட்டு பாடவேண்டும். ஆண்கள் வழக்கப்போல வாயை பொத்திக்கொண்டு கைகளால் ஆட்டுகிற வேலையை மட்டுமே பார்க்கவேண்டும். (இன்னா நைனா மொறைக்கிற… நான் தொட்டிலை சொன்னேன்)

Shishupalasana.

இந்த சிசுபாலசனத்திற்கு இன்னும் ஒரு பெயர் இருக்கிறது.

ஓ!… அப்படியா அது என்ன என கேட்கிறீர்களா?!!!

அதுவும் “சிசுபாலாசனம்” தான். ஹி…. ஹிஹி…. சும்மா ஒரு ஜோக்…

அடப்பாவி… நீயெல்லாம் “யோகி பாபு” ரேஞ்சுக்கு ஜோக் அடிக்க கிளம்பிட்டீயா…. என சிரிக்கிறீங்களா?!… சாரி முறைக்கிறீங்களா!!..

சாரி பாஸ் கோபப்படாதீங்க… இதனுடைய இன்னொரு பெயரையும் இப்பவே சொல்லிடுறேன்… “ஹிந்தோலாசனம்”.

ஹிந்தோலாசனம் என்பது சமஸ்கிருத சொல். இதற்கு தமிழில் “ஆடும் தொட்டில்” என்று பொருள். இந்த ஆசனத்தின் அமைப்பு பார்ப்பதற்கு தொட்டிலைப்போல இருப்பதால் இதனை தமிழில் “தொட்டில் ஆசனம்” என்றும் கூறுகின்றனர்.

வாருங்கள் நாம் தொட்டில் ஆசனத்தைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

பெயர் – Shishupalasana.

தமிழ் – சிசுபாலாசனம், தொட்டில் ஆசனம்.

சமஸ்கிருதம் – Hindolasana. (ஹிந்தோலாசனம்).

ஆங்கிலம் – Cradle Pose.

வேறுபெயர்கள் – Baby Cradle Pose, Rock The Baby Pose.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Stretch, Restorative.

இது பார்ப்பதற்கு மிக எளிதாக பயிற்சி செய்யக்கூடிய ஆசனம் போல் தெரியலாம். ஆனால் சொல்லப்போனால் கொஞ்சம் கடினம்தான்.

ஆனால் ஆரம்பத்தில் இதை பயற்சி செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வர உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் ஆசனம் எனலாம்.

கால்கள், தொடைகள், இடுப்பு மற்றும் அதனை சார்ந்த “கசமுசா” பகுதிகள் மட்டுமல்லாது கைகள், முதுகு, தோள் பட்டை முதலிய உறுப்புகள் வலுப்பெற வேண்டுமெனில் இப்பயிற்சியை தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டியது அவசியம்.

Hindolasana - Shishupalasana.

இனி இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதைப் பார்ப்போமா!.

Shishupalasana – சிசுபாலாசனம். கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். நிமிர்ந்து நேராக உட்காரவும். பிறகு வலது காலை மடக்கி இடது கையால் தூக்கவும். அவ்வாறு தூக்கும்போது மெதுவாகவும் நிதானமாகவும் தூக்கவும். வேகமாக தூக்குனீர்கள் என்றால் நிதானம் தவறி மல்லாந்து விழுந்து விடவும் வாய்ப்புள்ளது.

அப்புறம் மானம் மானாவாரியாக காற்றில் பறப்பது மட்டுமல்லாது நேரம்காலம் தெரியாமல் நீங்களே உங்கள் காலை வாரிவிட்டது போலவும் ஆகிவிடும்.

யோகப்பயிற்சியில் மானம்தான் முக்கியம்.

அகவே,.. மானம் போகாமல் இருக்க வேண்டுமென்றால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

Shishupalasana mother.

சரி,… இடது கையால் தூக்கிவிட்டீர்களா?…அதன்பின் படத்தில் காட்டியுள்ளதுபடி இரு கைகளையும் கோர்த்து ஒரு குழந்தையை தாங்கிப் பிடிப்பதுபோல் தாங்கிப் பிடிக்கவும். உடலை பின்னோக்கி சாய்த்து விடாதீர்கள். உடல் நேராகவே இருக்கட்டும்.

முதலில் கால்களை தூக்குவது மிக கடினமாக இருக்கும். உங்களால் எவ்வளவு தூக்க முடிகிறதோ அவ்வளவு தூக்கினால் போதுமானது. அதன் பின் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி எடுத்துவர சில வார இடைவெளியில் ஓரளவு சரியாக செய்யும் அளவிற்கு உடல் பழக்கப்பட்டுவிடும்.

அதை விடுத்து ஒரே நாளில் சரியாக செய்துவிட வேண்டும் என்று உடலை அதிகம் துன்புறுத்த வேண்டாம். அது உங்கள் கைகளில் உள்ள குழந்தையையும் சேர்த்தே துன்புறுத்துவதுபோல் அமைந்துவிடும்.

சரி,.. இனி பயிற்சியை தொடர்ந்து பார்ப்போம். நிமிர்ந்து நேராக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டி வலது காலை மடக்கி இடது கையால் தூக்கி இரு கைகளையும் கோர்த்தபடி ஒரு குழந்தையை தாங்கிப்பிடிப்பதுபோல் தாங்கிப் பிடித்து கொண்டீர்களல்லவா?!…

குட்… இனி என்ன செய்ய வேண்டும் என ஆர்வமாக இருக்கிறதா?!…

வேறென்ன…. தாலாட்ட வேண்டியதுதான்…

குழந்தையை தாலாட்டுவது போல் இடம் வலமாக இடுப்பை லேசாக திருப்பித்திருப்பி மெதுவாக காலை அசைத்துக் கொடுக்கவும்.

அப்படித்தான்… அப்படித்தான்… வாவ்… கிரேட்…

மூச்சை அடக்காதீர்கள்.. கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விடுவீர்கள்… எனவே மூச்சை இயல்பாக விடுங்கள்.

பின் மெதுவாக காலை இறக்கி நேராக நீட்டுங்கள். சில வினாடிகள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

இதே பயிற்சியை காலை நேராக நீட்டுவதற்குப் பதிலாக இந்த பதிவின் ஆரம்பத்தில் காட்டியுள்ள படங்களில் உள்ளபடி காலை மடக்கி வைத்தபடியும் செய்யலாம். மானம் போகாமல் இருக்கும்… அல்லது காலை நீட்டி செய்யும் பயிற்சியையும், மடக்கி செய்யும் பயிற்சியையும் அடுத்தடுத்து ஒரு சேர பயிற்சி எடுத்து வரலாம்.

Shishupal. gl

சரி… இனி அடுத்த குழந்தையை தாலாட்டுவோமா?!!…

முன்பு வலது காலை மடக்கி இடது கையால் தூக்கினீர்கள் அல்லவா… இப்பொழுது இடது காலை மடக்கி வலது கையால் தூக்குங்கள்… அப்படியே இரு கைகளையும் கோர்த்து பிடித்து முன்போல இடம் வலமாக இடுப்பை லேசாக திருப்பி குழந்தையை தாலாட்டுவதை போல அசையுங்கள்.

இவ்வாறு இரு கால்களையும் மாற்றிமாற்றி ஒவ்வொரு காலிற்கும் ஐந்தைந்து தடவை தாலாட்டு பாடுங்கள். வெரி சாரிங்க… பயிற்சி எடுங்கள்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் கால்கள், உள்ளங்கால்கள், மூட்டு, தொடைகள், இடுப்பு மற்றும் இத்யாதி இத்யாதி உறுப்புகளுடன் வயிற்று பகுதிகளும் நன்கு பலம் பெறும். அதுமட்டுமல்லாது கைகள், தோள் பட்டை, முதுகு பகுதிகள்கூட நன்கு வலுப்பெறும்.

மேலும்,… இந்த பயிற்சி முழங்கால், முதுகு, இடுப்பு, தொடைகள் ஆகியவைகளின் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கிறது,

இது இனப்பெருக்க மற்றும் செரிமான உறுப்புகளை தூண்டுகிறது. உங்களின் பாலியல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

கடுமையான முட்டிவலி, முழங்கால் வலிகளோடு கழுத்துவலிகளும் ஏற்பட்டிருந்தால் இந்த ஆசனத்தை தவிர்த்துவிடவும்.

இன்னாது… முதுகிலும் வலிகள் இருக்கிறதா?!!… அப்படி என்றால் முக்காடு போட்டுக்கொண்டு இந்த ஆசனத்திற்கு முழுக்கு போட்டுவிடுங்கள்.

மேலும், இடுப்புல காயம் இருக்கா… முழங்காலில் காயம் இருக்கா… அல்லது வழக்கம்போல் வாய்களில்… கைகளில்… உட்காரும் இடங்களில்….

Shishupalasana. Vadivelu crying.

மூலநோய்” உள்ளவர்கள் முதலிலிருந்தே இந்த ஆசனத்தை கைவிட்டுவிட வேண்டும். கடுமையான கீல்வாத நோயுள்ளவர்களும் இந்த ஆசனத்தை கைவிட்டுவிட வேண்டும்.

கர்ப்பிணிப்பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். பிரசவித்த பெண்கள் குழந்தை பிரசவித்த எட்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயிற்சி செய்து வரலாம்.

சமீபத்தில் வயிற்று பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தயவுசெய்து இந்த ஆசனத்தை முயற்சி செய்ய வேண்டாம்.

*********

சிசுபாலாசனத்தை கற்றுக்கொண்ட உங்களுக்கு “பாலாசனம்” என்று ஒரு ஆசனமும் இருப்பது தெரியுமா?… தெரிந்துகொள்ள ஆர்வமா?!!… கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் பேனர் லிங்கை சொடுக்குங்க…

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக கால்கள், கைகள், மூட்டுகள், தோள் பட்டை, முதுகு, உள்ளங்கால்கள், தொடைகள், வயிற்று பகுதிகள், இடுப்பு ஆகியன நன்கு பலம் பெறுகின்றன.

இந்த பயிற்சியானது இனப்பெருக்க மற்றும் செரிமான உறுப்புகளை தூண்டுகிறது எனவும் பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் ” கடுமையான முட்டிவலி, முழங்கால் வலிகளோடு, இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலிகளும் ஏற்பட்டிருந்தால் இந்த ஆசனத்தை தவிர்த்துவிடவும்.

மூலநோய், கீல்வாதநோய் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

சமீபத்தில் வயிற்று பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், பிரசவித்த பெண்கள் இதனை முயற்சிசெய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “முழங்கால் வலி” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

படித்து பயனடைந்தவர்கள்: 11
இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!