"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Gomukhasana – கோமுகாசனம்

கோ + முகம் + ஆசனம் = கோமுகாசனம். கோமுகாசனம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். “கோ” என்பது தலைவன், அரசன், பசு என பல பொருள்களைத்தரும். ஆனால், இங்கு “கோ” என்பது பசுவை குறிக்கிறது. Gomukhasana – கோமுகாசனம் என்றால் “பசு முக இருக்கை” (Cow Face Pose) என்று பொருள். பசுவின் முகம் எப்படி இருக்குமோ அதுபோல உங்கள் உடலை அமைத்துக்கொண்டு அமருவதால் இந்த ஆசனத்திற்கு ‘கோமுகாசனம்’ என பெயர்.

Gomukhasana

கி.பி. 300 – ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட உபநிடத நூலான “தர்சன உபநிடதத்தில் சிறப்பான ஆசனங்களாக விவரிக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களில் கோமுகாசனமும் ஒன்றாகும்.

பெயர் – Gomukhasana.

தமிழில் – பசு முக இருக்கை.

சமஸ்கிருதம் – Gomukhasana

ஆங்கிலம் – Cow Face Pose.

வேறுபெயர்கள் –

  • Gaumukhasana (கௌமுகாசனம்)

ஆசனத்தின் நிலை – Seated.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Stretch, Restorative, Meditative.

Gomukhasana – கோமுகாசனம் செய்முறை

ஒரு கெட்டியான விரிப்பின்மீது நிமிர்ந்து உட்காருங்கள். உங்கள் இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டுங்கள்.

இடது முழங்காலை மடித்து இடது பாதத்தை வலது பிட்டத்தின் கீழ் வையுங்கள்.

அதன்பின் வலது முழங்காலை மடித்து அதை உங்கள் இடது முழங்காலுக்கு நேராக வைத்து வலது பாதத்தை இடது இடுப்புக்கு அருகில் வைக்கவும்.

இப்போது உங்களின் இரண்டு கால் மூட்டு பகுதிகளும் ஒன்றின் மேல் ஒன்றாக இருப்பதை பார்க்கலாம். இது பார்ப்பதற்கு பசுவின் நீண்ட வாய் போன்றும் இரு பக்கங்களிலும் உள்ள பாதங்கள் பசுவின் காதுகள் போன்றும் காணப்படுவதை காணலாம். எனவேதான் இதற்கு கோமுகாசனம் என்று பெயர்.

உங்கள் இடதுகையை நேராக மேலே உயர்த்தி உங்கள் முழங்கையை வளைத்து தலைக்கு பின்னால் கொண்டுவந்து மேல்முதுகை தொடவும்.

உங்கள் வலதுகையை முதுகுக்கு பின்னால் கொண்டுசென்று முழங்கையை மேல்நோக்கி வளைத்து வலது கைவிரல்களை இடது கைவிரல்களுடன் கொக்கி போன்று கோர்க்கவும்.

ஆனால், ஆரம்பகட்டத்தில் இது சாத்தியமில்லை. அதற்காக அதிக அளவு முயற்சிசெய்து உடலை வருத்தவேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்துவர சில மாதங்களில் கைகளை கோர்த்து கொள்வது சாத்தியமாகும். எனவே ஆரம்பத்தில் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று தொடும்படி வைத்து பயிற்சி எடுக்கவும்.

இதே நிலையில் மூச்சை ஆழமாக சுவாசித்தபடி 30 முதல் 60 வினாடிகள் இருக்கவும்.

Cow Face Pose

பின்னர் உங்கள் கைகளையும் கால்களையும் விடுவித்து இயல்பான நிலைக்கு வரவும். அதாவது இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி நிமிர்ந்து நேராக உட்காரவும்.

சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றிப்போட்டு இதே ஆசனத்தை செய்யவும். எப்படியெனில், முதல் தடவை இடது முழங்காலை மடித்து இடது பாதத்தை வலது பிருஷ்டத்தின் கீழ் வைத்தீர்கள் அல்லவா?… இப்பொழுது வலது முழங்காலை மடித்து வலது பாதத்தை இடது பிருஷ்டத்தின் கீழ் வையுங்கள்.

அதன்பின் இடது முழங்காலை மடித்து அதை உங்கள் வலது முழங்காலுக்கு நேராக வைத்து இடது பாதத்தை வலது இடுப்புக்கு அருகில் வைக்கவும்.

உங்கள் வலதுகையை நேராக மேலே உயர்த்தி உங்கள் முழங்கையை வளைத்து தலைக்கு பின்னால் கொண்டுவந்து மேல்முதுகை தொடவும்.

உங்கள் இடதுகையை முதுகுக்கு பின்னால் கொண்டுசென்று முழங்கையை மேல்நோக்கி வளைத்து இடது கைவிரல்களை வலது கைவிரல்களுடன் கொக்கி போன்று கோர்க்கவும்.

இந்த நிலையில் மூச்சை ஆழமாக சுவாசித்தபடி 30 முதல் 60 வினாடிகள் இருக்கவும். இந்த நேர அளவானது ஆரம்ப பயிற்சியாளர்களுக்ககானது. நெடு நாட்களாக பயிற்சி எடுப்பவர்கள் 2 முதல் 5 நிமிடங்கள் வரையில் இந்த ஆசனத்தில் அமரலாம். அதன்பின் உங்கள் கைகளையும் கால்களையும் விடுவித்து இயல்பான நிலைக்கு வரவும்.

இது ஒரு சுற்று. சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றி மாற்றி திரும்ப திரும்ப இந்த ஆசனத்தை செய்து வரலாம். அவ்வாறு 3 சுற்றுகள்வரை செய்யலாம்.

Gomukhasana – பயிற்சியின் பலன்கள்

உங்கள் தோள்பட்டையின் விரைப்புத்தன்மையை நீக்கி இரு புஜங்களையும் அழகாக்குகிறது.

கணுக்கால், தொடைகள், முழங்கைகள் மற்றும் அக்குள் ஆகியவைகளை வலுப்படுத்துகிறது. கால் மூட்டுகளின் செயல்திறனையும் கூட்டுகிறது.

முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் முதுகு தசைகளையும் வலுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது மார்பு தசைகளுக்கும் இடுப்பு தசைகளுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

நுரையீரலை விரிவடைய செய்வதின்மூலம் சிறந்த சுவாச செயல்பாட்டிற்கு உதவுகிறது. சுவாசத்தை ஆழமாக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.

சிறுநீரகங்களை வேலை செய்ய தூண்டுகிறது. செரிமான அமைப்பையும் தூண்டுகிறது.

நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி சுவாசத்தை சீராக்கி மனதை சாந்தப்படுத்துவதால் தியானிப்பதற்கும் இந்த ஆசனம் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்

உங்களுக்கு கடுமையான தோள்பட்டைவலி உள்ளதா?… அப்படியென்றால் அந்த வலிகள் குணமாகும்வரை இந்த ஆசனத்தை சிறிது தள்ளி வையுங்கள்.

கால்கள், முழங்கால்கள், முதுகெலும்பு மற்றும் கால் மூட்டுகளில் வலி இருந்தால் இந்த ஆசனத்தை தவிர்த்து விடுங்கள்.

Gomukhasana - Cow Face Pose

மூலநோயினால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த ஆசனத்தை நீங்கள் தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிப் பெண்களும் இந்த ஆசனத்தைத் தவிர்த்தல் வேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

Gomukhasana – கோமுகாசனம் என்னும் இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக கணுக்கால், தொடைகள், முழங்கைகள், அக்குள், கால் மூட்டுகள், மார்பு தசைகள், இடுப்பு தசைகள், முதுகு தசைகளை வலுப்படுத்துகிறது. நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

சிறுநீரகங்களையும், செரிமான அமைப்பையும் வேலைசெய்ய தூண்டுகிறது என்பதனையும் பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கால்கள், முழங்கால்கள், முதுகெலும்பு, கால் மூட்டுகளில் வலி மற்றும் தோள்பட்டைவலி உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “தோள்பட்டைவலி” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

தோள்பட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் தாங்கமுடியாத வலியையே நாம் தோள்பட்டை வலி என்கிறோம்.

இத படிங்க முதல்ல – Read this first…

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!