"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Eka Padasana – ஏக பாதாசனம்

பயிற்சி செய்வதற்கு எளிமையான “Eka Padasana – ஏக பாதாசனம்” என்னும் ஆசனத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஏக் (ஏக) என்றால் “ஒன்று” என்று பொருள். பாத என்றால் “பாதம்” என்று பொருள். ஏக பாதாசனம் என்றால் “ஒற்றை பாத ஆசனம்” என்று பொருள். ஒரு பாதத்தை மட்டும் தரையில் ஊன்றி இந்த ஆசனம் செய்யப்படுவதால் இதனை “ஒற்றை பாத ஆசனம்” (Eka Padasana – ஏக பாதாசனம்) என்கின்றோம்.

முழு உடலையும் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி சமநிலைப்படுத்துவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே இது எளிதாக கைகூடும்.

பாதத்திலிருந்து இடுப்பு வரையிலும் உடல் நேராகவும்… இடுப்புக்கு மேல் உடல் கிடைமட்டமாகவும் இருக்கும்படி அமைப்பதே இந்த ஆசனத்தின் ஹைடெக் பொசிஷன் எனலாம். இந்த நிலையில் உடல் பார்ப்பதற்கு “T” வடிவில் அமைகின்றன.

பெயர் – Eka Padasana.

தமிழில் – ஏக பாதாசனம்.

சமஸ்கிருதம் – Eka Padasana.

ஆங்கிலம் – One Foot Pose.

வேறுபெயர்கள் – Eka Pada asana, One Leg Pose.

ஆசனத்தின் நிலை – Standing, One-Legged.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Forward Bend, Balance, Stretch, Strength.

ஒரு கெட்டியான விரிப்பின்மீது இரண்டு பாதங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும்.

உங்கள் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்துங்கள்.

உங்கள் இரு கைகளும் கும்பிட்ட நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்துக்கொள்ளலாம்.

Eka Padasana

வலது பாதம் தரையில் உறுதியாக படிந்திருக்கும்படி செய்து இடது காலை படிப்படியாக பின்னோக்கி நீட்டும்போதே இடுப்பிற்கு மேலுள்ள உடலை முன்னோக்கி படிப்படியாக வளைக்கவும்.

உங்கள் இரு கைகளும் கும்பிட்ட நிலையில் முன்னோக்கி நீட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

அதாவது கைகள் இரண்டும் முன்னோக்கி நீட்டப்பட்ட நிலையிலும் இடதுகால் பின்னோக்கி நீட்டப்பட்ட நிலையிலும் உடல் நேர்கோட்டில் கிடைமட்டமாக இருத்தல் வேண்டும்.

இதே நிலையில் இருந்துகொண்டு 5 முதல் 10 தடவை ஆழமாக சுவாசியுங்கள். அல்லது இயல்பாககூட சுவாசிக்கலாம்.

அதிகப்படியாக 1 நிமிடம்வரை ஆசன நிலையில் இருக்கலாம்.

பின்பு மூச்சை நிதானமாக வெளியே விட்டவாறே இடதுகாலை கீழே இறக்கும் அதே வேளையில் உடலை மேல்நோக்கி உயர்த்தி கைகளை கீழே தாழ்த்தி இரு கால்களையும் ஊன்றியவாறு நேராக நிற்கவும்.

சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றி செய்யவும்.

Eka Padasana Pose

முன்புபோல் உங்கள் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்துங்கள்.

உங்கள் இரு கைகளும் கும்பிட்ட நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்துக்கொள்ளலாம்.

இப்போது இடது பாதம் தரையில் உறுதியாக படிந்திருக்கும்படி செய்து வலது காலை படிப்படியாக பின்னோக்கி நீட்டும்போதே இடுப்பிற்கு மேலுள்ள உடலை முன்னோக்கி படிப்படியாக வளைக்கவும். உங்கள் இருகைகளும் கும்பிட்ட நிலையல் முன்னோக்கி நீட்டப்பட்ட நிலையில் முன்போலவே வைக்கவும்.

Eka Pada Aasana

இவ்வாறு இருகால்களையும் மாற்றி மாற்றி 2 முதல் 3 தடவை இதனை பயிற்சி செய்யவும்.

கால்களிலுள்ள அனைத்து தசைகளும் வலிமையடைகின்றன. வயிற்று தசைகள் இடுப்பு தசைகள், முதுகு தசைகள் அனைத்தும் பலம் பெறுகின்றன.

முதுகெலும்புகள், தண்டுவடம் ஆகியன வலிமையடைகின்றன.

கைகளையும் தோள்களையும் வலுப்படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டையும் அதிகப்படுத்துகிறது.

குறிப்பு

இதயத்தில் பிரச்சனை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

முதுகில் கடுமையான காயங்கள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

கடுமையான முழங்கால், கணுக்கால், மூட்டுவலி உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும்.

விருட்சாசனம் (Vrikshasana)

ஏக பாதாசனம் எவ்வாறு ஒரு காலில் பயிற்சி செய்யப்படுகிறதோ அது போல் ஒரு காலில் நின்று பயிற்சி செய்யக்கூடிய மற்றொரு அற்புதமான ஆசனமும் உள்ளது. அதன் பெயர் “விருட்சாசனம்” (Vrikshasana). இந்த விருட்சாசனத்தையும் சிலர் ஏக பாதாசனம் என குறிப்பிடுவதுண்டு.

இந்த விருட்சாசனமானது சிரசாசனத்திற்கு மாற்று ஆசனம். அதாவது “சிரசாசனம்” செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக செய்ய வேண்டிய மிக முக்கியமான ஆசனம்.

சிரசாசனத்தின் மாற்று ஆசனமான இந்த விருட்சாசனத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நீங்களும் ஆர்வமாக இருக்கின்றீர்கள் அல்லவா?!

விருட்சாசனத்தைப் பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் ஐ கிளிக்குங்க…

>> Vrikshasana – விருட்சாசனம் <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக வயிற்று தசைகள், இடுப்பு தசைகள், முதுகு தசைகள் பலம் பெறுவதோடு முதுகெலும்புகள், தண்டுவடம் வலிமையடைகின்றன என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் இதயபிரச்சனை, இரத்த அழுத்தம், கடுமையான முழங்கால், கணுக்கால், மூட்டுவலிகள், முதுகில் கடுமையான காயங்கள் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “இரத்த அழுத்தம்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

இரத்த அழுத்தம் – Blood Pressure

உடலின் அனைத்து பாகங்களுக்கும் தேவையான இரத்தத்தை இரத்தக்குழாய்களின் வழியாக இதயமானது குருதியை பம்ப் செய்து அனுப்புகிறதல்லவா?.. அவ்வாறு அனுப்பும்போது இரத்தக்குழாய்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தைத்தான் “இரத்த அழுத்தம் (Blood Pressure) என்கிறோம்.

சாதாரணமாக இருக்கவேண்டிய இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 mmHg ற்கும் கீழே இருக்கவேண்டும்.

இதில் Forward Slash ன் மேற்பகுதியில் இருக்கும் 120 என்னும் அளவானது இதயம் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தத்தையும், Forward Slash ன் கீழ்பகுதியில் இருக்கும் 80 என்னும் அளவானது இதயம் விரியும்போது ஏற்படும் அழுத்தத்தையும் குறிக்கிறது.

இரத்த அழுத்தத்தின் அளவு 140/90 mmHg ம் அதற்கு மேலும் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாக குறிப்பிடப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மாறுபடலாம்.

உணவில் அதிகப்படியான உப்பு (சோடியம்) எடுத்துக்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் வரலாம். சர்க்கரை நோய் (நீரழிவு) பிரச்சனை உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

இயல்பான அளவைவிட இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பின் அது இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உணவில் உப்பு பயன்பாட்டை குறைத்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிசையின் முதல் படி எனலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதோடு உடல் எடையை சீராக பராமரித்து வரவேண்டியதுவும் அவசியம்.

இரத்த அழுத்தத்தின் அளவு 90/60 mmHg ம் அதற்கு கீழும் இருந்தால் அது குறைந்த இரத்த அழுத்தமாக அளவிடப்படுகிறது.

உங்களுக்கு ஏற்கனவே இதயத்தில் எதாவது பிரச்சனை இருந்தால் அது குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களாலும் குறைந்த இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இயல்பான அளவைவிட இரத்த அழுத்தம் குறைவாக இருப்பின் அது மூளை மற்றும் இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் செய்துவிடும் ஆபத்து அதிகரிக்கிறது. இதனால் சோர்வு, மயக்கம், தலைசுற்று, தலைவலி முதலியவைகளை ஏற்படுத்துகிறது. மேலும் உடல்பலவீனம், தடுமாற்றம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, குமட்டல் உணர்வு மற்றும் உடல் குளிர்ச்சி அடைவதுடன் தோல் வெளிறிப்போவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தீவிரமாகும்போது மூளை மற்றும் இதர முக்கியமான உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்படைவதால் மரணம்கூட ஏற்படலாம்.

இதயம் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

உடலில் நீரிழப்பு ஏற்பட்டாலும் அது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால் போதுமான தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம்.

உடலில் சோடியம் சத்து குறைவுபட்டாலும் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

இப்படியானவர்கள் உணவில் சிறிது உப்பை அதிகப்படுத்தி பார்க்கலாம். என்றாலும், இதய நோய் உள்ளவர்கள் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பே உப்பை அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் உப்பானது இதயநோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!