"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Salaphasana – சலபாசனம்

Salaphasana – சலபாசனம். நோயணுகாமல் உடலைக் காப்பதில் யோகாசன பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வாறான பயிற்சிகளில் உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளையும் இதமாக மசாஜ் செய்து உடலை நோயணுகாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் யோக ஆசனங்களே சிறப்பானவை எனலாம்.

நாம் இன்றைய பதிவில் “வெட்டுக்கிளி” ஆசனத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

இன்னாது வெட்டுக்கிளி (Grasshopper) ஆசனமா?!

ஆம்… “வெட்டுக்கிளி” ஆசனமேதான்… இன்னும் உங்களுக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் “சலபாசனம்” என்று சொல்லலாம்.

Salaphasana - Locust Pose girl

“சலபம்” என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இவ்வாசனத்தில் அமரும்போது உடலானது வெட்டுக்கிளியின் தோற்றத்தை பெறுவதால் இதற்கு “சலபாசனம்” (Salaphasana) என பெயர் ஏற்பட்டது.

பெயர் – Salaphasana.

தமிலழ் – சலபாசனம்.

சமஸ்கிருதம் – Salaphasana.

ஆங்கிலம் – Locust Pose.

வேறுபெயர்கள் –

ஆசனத்தின் நிலை – Prone, Abdomen.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Strength.

Salaphasana - Locust Pose yoga.

பொதுவாகவே யோகாசனப் பயிற்சியானது செல்களிலும், நரம்பு மண்டலங்களிலும் உயிர் மின்னாற்றலை தூண்டி முதுமையிலும் இளைஞர்களுக்கே உரித்தான உற்சாக மனநிலையை நல்குவது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனதிற்கு உற்சாகத்தை தருவதோடு இளமையையும் தரும் பலவகையான யோகாசனங்களில் நாம் இப்போது பார்க்கப்போகும் சலபாசனமும் ஒன்று.

”சலபாசனம்” (Salaphasana) என்னும் இவ்வாசனமானது மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் திறன் படைத்தது.

இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை காண்போம்..

முதலில் ஒரு கெட்டியான தரைவிரிப்பின்மீது குப்புற படுக்கவும். கைகள் இரண்டும் உடலினை ஒட்டியபடி உள்ளங்கை இரு தொடைகளுக்கும் அடியில் தரையை அழுத்தியபடி வைத்துக்கொள்ளவும்.

இனி மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இருகால்களையும் மடங்காமல் நேராக நீட்டிவைத்தபடியே மெதுவாக மேலே உயர்த்தவும். முகவாய், மார்பு, வயிறு, இடுப்பு வரை உள்ள பகுதி தரையில் நன்கு அழுத்தியபடி இருக்கவும். கால்கள் மட்டும் சாய்வான நிலையில் மேலே தூக்கியபடி இருக்க வேண்டும்.

மூச்சை அடக்கியபடியே சில வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி கால்களை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும்.

மூச்சை அடக்கியபடி இருக்கவேண்டும் என்பதற்காக இதயமும், நுரையீரலும் ஆக்சிஜனுக்காக திக்குமுக்காடும் அளவுக்கு மூச்சை பல வினாடிகளுக்கு அடக்கிவிடாதீர்கள்… அப்புறம் உடல் கர்த்தருக்குள் நித்திரையாகிவிடும்..

எனவே,… உடல் மூச்சுக்காற்றுக்கு பரிதவிக்காத அளவுக்கு சில வினாடிகள் மட்டும் மூச்சை அடக்கினால் போதுமானது.

சில வினாடி ஓய்வுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்யவும். இப்பயிற்சியை 3 அல்லது 4 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.

தினந்தோறும் இப்பயிற்சியை அதிகாலையில் பயின்று வருவது மிகுந்த நன்மையை உண்டு பண்ணும்.

ஆஸ்துமா மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கான அற்புதமான ஆசனம் இது.

Practice Salaphasana - Locust Pose

இப்பயிற்சியானது நுரையீரலுக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. இது மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக ஆஸ்துமா முதலிய நோய்களை துரத்துவதற்கு சிறந்த ஆசனம்.

நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் (Liver and Spleen) பலப்படுத்துகிறது. கணையத்தை பலப்படுத்துவதில் இவ்வாசனம் மிக சிறப்பாக செயல்படுகிறது.

குடல்புண், இரைப்பை புண், உதரவிதான இறக்கம் (diaphragmatic hernia), சிறுநீர் கடுப்பு முதலியவற்றை குணப்படுத்துகிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.

முதுகு தண்டுவடத்தை வலுவாக்கி முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகளை போக்குகிறது.

இடுப்பு, தொடை, பிட்டம் மற்றும் கைகளிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதற்கு உதவுகிறது.

இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம்.

கடுமையான முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

கர்ப்பிணி பெண்களும் இப்பயிற்சியை கண்டிப்பாக செய்தல் கூடாது.

சவாசனம் – Savasana

எந்த வகையான யோகாசனப்பயிற்சி செய்தாலும் அன்றைய தின யோகாசனப் பயிற்சியை முடிக்கும் போது கடைசி ஆசனமாக ”சவாசனம்” கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். கடைசி ஆசனமாக சவாசனம் செய்து அன்றைய ஆசனப் பயிற்சியை நிறைவு செய்தால்தான் ஆசனத்தினால் ஏற்படும் முழு பலன்களையும் பெறமுடியும். இல்லையெனில், பலவிதமான பக்கவிளைவுகளையே சந்திக்கவேண்டி இருக்கும்.

சவாசனம் செய்யும் முறை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள பேனர் (Banner) ஐ மொள்ளமா தட்டுங்க… நம்ம கைப்புள்ள மாதிரி காலை அகட்டிவச்சுக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே தூங்குங்க… கொர்ர்…

>> Savasana – சவாசனம் <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக ஆஸ்துமா மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கான அற்புதமான ஆசனம் என்பதனை பார்த்தோம்.

நுரையீரல், இருதயம், கணையம், முதுகு தண்டுவடம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் (Liver and Spleen) பலப்படுத்துகிறது.

முதுகு வலி, இடுப்பு வலி, குடல்புண், இரைப்பை புண், உதரவிதான இறக்கம் (diaphragmatic hernia), சிறுநீர் கடுப்பு முதலியவற்றை குணப்படுத்துகிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது. என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கடுமையான முதுகு வலி, கழுத்து வலி, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் இப்பயிற்சியை செய்தல்கூடாது என்பதனையும் அறிந்தோம்.

கர்ப்பிணி பெண்களும் இப்பயிற்சியை கண்டிப்பாக செய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “உதரவிதான இறக்கம் (diaphragmatic hernia)” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!