"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Vakrasanam – வக்ராசனம்

Vakrasanam – வக்ராசனம். பொதுவாக யோகாசனம் செய்வதற்கு வயது ஒரு தடை அல்ல. ஐந்து வயதில் தொடங்கி சுமார் எண்பது வயது வரையில் இருபாலரும் இப்பயிற்சியில் ஈடுபடலாம். காலை, மாலை இரு நேரங்களிலும் யோகாசனப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அதிகாலை உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் என்றாலும் மாலையிலும் யோகா செய்துவரலாம் தவறில்லை. காலையில் உடல் நன்கு வளைந்து கொடுப்பதில்லை. ஆனால் மாலையில் உடல் நன்கு பயிற்சிக்கு வளைந்து கொடுப்பதை நீங்கள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம்.

காலையோ, மாலையோ யோகா பயிற்சி செய்வதற்குமுன் மலசலம் கழித்து வயிறு காலியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உணவு உண்டவுடன் பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது. உணவு உண்டு குறைந்தது 3 மணிநேரம் கழித்தே பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

அதேபோல் பயிற்சி செய்து முடித்த உடன் சாப்பிடக்கூடாது. பயிற்சி முடிந்து அரைமணிநேரம் கழித்த பின்பே சாப்பிடுவதோ, குளிப்பதோ, குளிர்ந்த நீரால் முகம் கழுவுவதோ செய்தல் வேண்டும்.

பருமனான உடலை கொண்டவர்கள் உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்வது என்பது கடினம். இவர்கள் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களை செய்து  உடல் மெலிந்தபின் பிற ஆசனங்களை செய்ய முன்வரலாம்.

பருமனான உடலை கொண்டவர்களும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஆசனத்தை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

அந்த எளிதான ஆசனம்தான் வக்ராசனம் (Vakrasanam).

Vakrasanam - Twisted Pose

”வக்ரா” என்றால் முறுக்குதல் என்று பொருள்.. இந்த ஆசனத்தில் உடல் திருக்கப்படுவதால் இது ”வக்ராசனம்” (Vakrasanam) என பெயர் பெற்றது.

இந்த ஆசனம் அனைத்து வயதினரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ள ஒரு எளிய ஆசனம்.

இன்று பெரும்பாலானவர்களை பாடாய்படுத்துகிறதல்லவா நீரழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை நோய்… அந்த சுகர் நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்த ஒரு சிறந்த பயிற்சி இது எனலாம்.

இதனை எவ்வாறு பயிற்சி செய்வது… பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன… என்பதனை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்…

Vakrasanam – வக்ராசனம் – அடிப்படைத் தகவல்கள்

பெயர் – Vakrasanam.

தமிழ் – வக்ராசனம்.

சமஸ்கிருதம் – Vakrasana.

ஆங்கிலம் – Twisted Pose.

வேறுபெயர்கள் – Side Twist, Spinal Twist.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Twist, Stretch.

Vakrasanam - Twisted Pose young boy

சரி, இனி வக்ராசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.

முதலில் ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகள் இரண்டையும் பிட்டத்தின் இரு பக்கங்களில் தரையில் ஊன்றியபடி நிமிர்ந்து உட்காரவும்.

வலதுகாலை மடக்கி வலது பாதத்தை இடது முழங்காலின் அருகில் வைக்கவும். உடலை வலது பக்கமாக திருக்கி இடது கையை வலது முழங்காலுக்கு வெளிப்புறமாக கொண்டு சென்று வலது காலின் பெருவிரலை பிடித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை தரையில் ஊன்றவும்.

Vakrasanam - Twisted Pose step by step

இதேநிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். முதுகு நேராக இருக்கவேண்டும். முன்னால் குனியவோ, பின்னால் வளையவோ கூடாது.

பின் இடதுகையை விடுவித்து உடலை நேராக கொண்டுவந்து கையை தரையில் ஊன்றிக்கொள்ளவும். வலதுகாலை நேராக நீட்டிகொள்ளவும். அதன்பின் கால்களை மாற்றி உடலை இடதுபக்கமாக திருப்பி இப்பயிற்சியை செய்யவும்.

இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி 3 முதல் 6 தடவை வரை செய்துவரலாம்.

முதுகுத்தண்டிற்கு உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. முதுகுப்பகுதி நன்றாக திருகப்படுவதால் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆதலால் இந்த பயிற்சி முதுகுவலி, இடுப்புவலி முதலியவற்றை நீக்குகிறது.

நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து இப்பயிற்சியை செய்துவர நோய் நீங்கி நாடி நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் நீக்குவதுடன் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள் அனைத்தும் நன்கு அழுத்தப்பட்டு சுறுசுறுப்பாகின்றன. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், நீரழிவு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், உடல் பருமன், தொந்தி முதலியன நீங்கும்.

கணையத்தின் செயல்பாடு இந்த பயிற்சியின்மூலம் சிறப்பாக தூண்டப்படுவதால் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனம் எனலாம்.

”ஹெர்னியா” (Hernia) என்று சொல்லப்படும் குடல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இப்பயிற்சி செய்தல் கூடாது.

கடுமையான முதுகுவலி அல்லது முதுகெலும்பில் எதாவது கோளாறுகள் இருக்கும்போது இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

முதுகில் அல்லது வயிற்றுப்பகுதிகளில் எதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் இந்த பயிற்சியை தவிர்த்தல் வேண்டும்.

கழுத்துவலி, கழுத்தெலும்பு அழற்சி உள்ளபோதும் இந்த பயிற்சியை தவிர்க்கவும்.

காய்ச்சல் இருக்கும் காலங்களில் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும். பெண்கள் தங்களின் கர்ப்ப காலங்களிலும், மாதவிலக்கு காலங்களிலும் இதனை செய்தல் கூடாது.

இதே பயிற்சியை சிற்சில மாற்றங்களுடன் காலை மடக்கி வைத்துக்கொண்டு செய்யும் பயிற்சி முறையும் உள்ளது. அதற்கு “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” என்று பெயர். அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழேயுள்ள பேனர் (Banner) ஐ தட்டுங்க…

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக “முதுகுத்தண்டிற்கு உறுதி மற்றும் முதுகுவலி, இடுப்புவலி முதலியவற்றை நீக்குகிறது.

நரம்புத்தளர்ச்சி நீங்கி நாடி நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் நீக்குவதுடன் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள் அனைத்தும் நன்கு அழுத்தப்பட்டு சுறுசுறுப்பாகின்றன. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், நீரழிவு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

கணையத்தின் செயல்பாடு சிறப்பாக அமையும் எனவும் பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் “ஹெர்னியா” (Hernia) என்று சொல்லப்படும் குடல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இப்பயிற்சி செய்தல் கூடாது.

கடுமையான கழுத்துவலி, கழுத்தெலும்பு அழற்சி, முதுகுவலி அல்லது முதுகெலும்பில் எதாவது கோளாறுகள் இருக்கும்போது இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

முதுகில் மற்றும் வயிற்றுப்பகுதிகளில் எதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் இந்த பயிற்சியை தவிர்த்தல் வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் காலங்களில் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும். பெண்கள் தங்களின் கர்ப்ப காலங்களிலும், மாதவிலக்கு காலங்களிலும் இதனை செய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “கழுத்தெலும்பு அழற்சி” என்னும் பிரச்சனையைப்பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!