"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Sukhasana – Easy Pose.

70 / 100

நீங்கள் அழகாக இருக்க விரும்புகிறீர்களா?

அப்படியென்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம்.

ஆரோக்கியம் வேண்டுமெனில் மனம் கவலைகளுக்கு உட்படாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

மனம் கவலைகளுக்கு உட்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் மனம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு கொந்தளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனம் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் அமைதியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு முறையாக பயிற்சிகொடுக்க வேண்டும்.

அதற்கான பயிற்சியே “தியானம்“.

meditation

இந்த தியானப்பயிற்சியை பயில்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.

அந்த விதிமுறைகளில் ஒன்று நீங்கள் தியானப்பயிற்சிசெய்ய அமரும்போது உங்கள் உடல் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக இருக்கவேண்டும். அதேவேளையில் உறுதியாகவும் இருக்கவேண்டும்.

அப்படியென்றால்தான் உங்களால் பல மணிநேரம் சிரமமில்லாமல் தியானத்தில் உட்காரமுடியும்.

அதேவேளையில், உங்கள் உடல் வளையாமலும் கூன்விழாமலும் முதுகு செங்குத்தாக நேராக இருக்க வேண்டியது அவசியம். கூன்விழுந்த முதுகோடு தியானமோ அல்லது மூச்சுப்பயிற்சியோ செய்தீர்கள் என்றால் அது உடலில் பலவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவேதான், “பிராணயாமம்” என்னும் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் உட்காருவதற்கான சில ஆசன முறைகளையும் சித்தர்களும் யோகிகளும் வகுத்துதந்துள்ளார்கள்.

Sukhasana

ஆசனம் என்பது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் ஆடாமல் அசையாமல் நெடுநேரம் வைத்திருப்பதைக் குறிக்கும். உடல் அசையாமல் இருந்தால்தான் மனமும் அசையாமல் நிலைபெறும். மனம் அசையாமல் நிலைபெற்றால்தான் தியானமும் கைகூடும்.

உடலை வளப்படுத்த பல ஆசனங்கள் உள்ளன என்றாலும், தியானப் பயிற்சிகளுக்காக சில தனிப்பட்ட ஆசனங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பத்மாசனம், சித்தாசனம், சோமாசனம், வஜ்ராசனம், ஸ்வஸ்திகாசனம், கோமுகாசனம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

இதில் பத்மாசனம், சோமசனம், வஜ்ராசனம் முதலியனவற்றில் எடுத்த எடுப்பில் உட்காருவதென்பது அனைவராலும் முடியாத காரியம். சில மாதங்கள் முறையாக பயிற்சியெடுத்து உடலை பழக்கப்படுத்தினால் மட்டுமே இதில் நெடிய நேரம் உட்காருவது சாத்தியம். இப்படியானவர்கள் பழகுவதற்கு எளிதாக உள்ள சித்தாசனம், ஸ்வஸ்திகாசனம், கோமுகாசனம் இவைகளில் ஏதாவதொன்றில் உட்கார்ந்து மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் பயிலலாம். இதுவும் கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் சுகாஸனத்தை பயிற்சி செய்யலாம்.

“சுகாசனம்” (Sukhasana) என்பது மிகவும் எளிதானது. நாம் சாதாரணமாக சம்மணம் போட்டு உட்காருகிறோமல்லவா அதுவே சுகாசனம்.

Sukhasana - Easy Pose.

எந்த ஆசனத்தில் உட்கார்ந்தாலும் முதுகு கூன்விழாமல் நேராக இருக்க வேண்டியது அவசியம். எனவே முதன்முதலாக மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செய்பவர்கள் முதலில் எளிமையான சுகாசனத்தில் அமர்ந்து பயிற்சி மேற்கொண்டு அதன்பின் ஸ்வஸ்திகாஸனம், சோமாசனம், பத்மாசனம் என கடினமான பயிற்சிகளை படிப்படியாக மேற்கொள்ளலாம். இப்போது சுகாசனம் பயிற்சி செய்யும் முறையை பார்ப்போம்.

ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து கீழே விரித்துக் கொள்ளுங்கள். விரிப்பின்மீது இருகால்களையும் நீட்டி உட்காருங்கள். அதன்பின் வலது முழங்காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். அதன்பின் இடது முழங்காலை மடித்து பாதத்தை வலது தொடையின் கீழ் வைக்கவும். இது சாதாரணமாக நாம் சம்மணம்கூட்டி அமர்வதுபோலத்தான். ஆனால் முதுகு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவேண்டியது மிகமிக முக்கியம். அப்படி நிமிர்ந்து உட்காரும்போது உடலை தம்கட்டி விறைப்பாக வைக்காமல் இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டியதுவும் அவசியம்.

வலது உள்ளங்கையை சின்முத்திரையுடன் வலது கால் முட்டியின் மீதும் இடது உள்ளங்கையை சின்முத்திரையுடன் இடதுகால் முட்டியின்மீதும் வைக்கவும்.

முதுகு, கழுத்து, தலை முதலியனவற்றை வளைக்காமல் அதேவேளையில் விறைப்பாகவும் வைக்காமல் செங்குத்தாக ஒரே நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

Easy Pose_Sukhasana.

இதுவே சுகாசனம். இந்த ஆசனத்தை செய்வது எளிதானது. இன்னும் பிற ஆசனங்களைப்போல உடலை வருத்தாமல் சுகமாக வைத்திருப்பதால்தான் இதற்கு சுகாசனம் என பெயர்.

ஆரம்பகட்ட மூச்சு பயிற்சி மற்றும் தியானப்பயிற்சிக்கு இந்த ஆசனத்தை பயன்படுத்தி வரலாம். 5 நிமிடத்தில் தொடங்கி 1 மணிநேரம் வரை இதில் அமரலாம். அதன்பின் அதிக பலன்தரும் சித்தாசனம், பத்மாசனம், சோமாசனம், ஸ்வஸ்திகாசனம் முதலியவைகளை பயிற்சிசெய்து தியானத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இடுப்பு, முதுகு வலுப்பெறுகிறது. மனது அமைதி பெறுகிறது. ஆரம்பகட்ட மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சிகளுக்கு மிகவும் ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!