"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Chakrasana.

79 / 100

உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்தரும் பயிற்சிகளான யோகாசனப் பயிற்சிகளை நாம் தொடர்ந்து பல பதிவுகளாகப் பார்த்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பயிற்சியில் முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சியான சக்கராசனத்தைப் (Chakrasana) பற்றித்தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம்.

இந்த சக்கராசனத்தை (Chakrasana) பயிற்சி செய்யும்போது உடல் பார்ப்பதற்கு அரை வட்ட சக்கரம்போல் காட்சி தருவதால் இதற்கு “சக்கராசனம்” (Chakrasana) என்று பெயர். அதனாலேயே இதனை ஆங்கிலத்தில் “வீல் போஸ் – Wheel Pose” என அழைக்கின்றனர்.

chakrasana-Wheel Pose

வாருங்கள்.. சக்ராசனம் (Chakrasana) செய்து சக்தி பெறுவோம். உடலை வளைத்து உவகை கொள்வோம்…

இந்த பயிற்சியில் முதுகுப்பகுதி பின்பக்கமாக வட்டமாக வளைவதால் சிலருக்கு பயிற்சி செய்வது கடினமாக இருப்பதோடு பயிற்சியின் போது தலை கனமாக உணர்தல் அல்லது தலைசுற்றுதல் போன்ற அசௌகரியங்களையும் உணரலாம்.

chakrasana

இப்படியானவர்கள் நாம் ஏற்கனவே பார்த்துள்ள “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் ஆசனத்தை நன்கு பயிற்சி செய்து அதில் தேர்ச்சியடைந்த பின் இந்த சக்கராசனத்தை பயிற்சி செய்ய முற்பட்டால் மேற்குறித்த அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.

இனி இதனை பயிற்சி செய்யும் முறையைப் பார்ப்போம்.

நான்காக மடித்து விரிக்கப்பட்டுள்ள ஜமுக்காளத்தின்மீது உடல் மற்றும் கால்களை தளர்வாக வைத்தபடி மல்லாந்து நேராக படுக்கவும்.

பின் இரு கால்களையும் மடக்கி இரு கால்களுக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி இருக்கும்படி பிருஷ்டத்தின் பக்கத்தில் வைத்து உள்ளங்கைகளை முறையே இரு காதுகளின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும். கைவிரல்களை பாதங்களை பார்த்திருக்கும்படி அமைக்கவும்.

பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டே இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை மேலே மெதுவாக தூக்கி உடலை அரைகோள வடிவில் கொண்டுவரவும்.

இப்போது உங்கள் இரு உள்ளங்கைகள் மற்றும் கால்களின் பாதங்கள் மட்டுமே தரையில் படித்த நிலையில் இருக்கும். எனவே கைகளும் கால்களும் உங்கள் உடல் எடையை சரிசமமாக தாங்கும்படி பார்த்துக்கொள்ளவும். இந்நிலையில் தலை கீழே தொங்கிய நிலையில் இருத்தல் வேண்டும்.

Chakrasana step by step

இதே நிலையில் 10 லிருந்து 15 வினாடிகள் இருக்கவும். இயல்பாக சுவாசிக்கவும்.

பின் உடலை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு கொண்டுவரவும். சில வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் இப்பயிற்சியை செய்யவும்.

திரும்ப திரும்ப மூன்றிலிருந்து ஐந்து தடவை இப்பயிற்சியை செய்யவும்.

இப்பயிற்சியால் கால்களும், மணிக்கட்டுகளும் விசேஷ பலத்தை பெறுகின்றன. தொடர்ந்து பயிற்சி செய்துவர தொப்பை தொலைந்து போகும்.

முதுகு தண்டிலுள்ள அத்தனை நரம்புகளும் தூண்டப்படுவதோடு முதுகெலும்பானது துவளும் தன்மையையும் பெறுவதால் நீடித்த இளமையைக் கொடுக்கும்.

இப்பயிற்சியால் இடுப்பு நன்கு பலம் பெறுவதொடு நெடுநாளாக உங்களை வாட்டிவந்த அஜீரண கோளாறுகள் நீங்கி மலச்சிக்கலும் ஒழிந்துபோகும்.

உடலில் தங்கி நிற்கும் கெட்ட நீர்களை வெளியேற்றுவதொடு தசைகளுக்கும் நன்கு வலிமையைக் கொடுக்கும். கை, கால்கள் உறுதி பெறுவதுடன் இடுப்பு தசைகளையும் வலுவாக்கும்.

மேலும் இப்பயிற்சியானது வயிற்றுப்பகுதியில் சேரும் அதிகப்படியான சதை மற்றும் கொழுப்பு படிமத்தை கரைக்கிறது.

 குடல் இறக்கம் குணமாவதோடு சிறுநீரகத்திற்கும் புத்துணர்வூட்டுகிறது.

இடுப்பு, முதுகு, கழுத்து இவைகளில் ஏற்படும் வலிகளையும் குணப்படுத்துகிறது.

இதயம், நுரையீரல், மார்பு மற்றும் சுவாச சம்பந்தமான உறுப்புகள் அனைத்திற்கும் நன்கு பலம் சேர்ப்பதோடு சுவாசக்குழாய் பாதைகளை சுத்தப்படுத்தவும் இப்பயிற்சி பேருதவி புரிகிறது.

பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை சரிசெய்வதொடு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கூன் விழுந்த முதுகை நிமிரச் செய்வதோடு உடலுக்கு நல்லதொரு வளர்சியை கொடுக்கும் சிறப்பான பயிற்சி இது.

இப்பயிற்சியை கண்டிப்பாக வயிறு மற்றும் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் பயிற்சி செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்களும் இதனை கண்டிப்பாக பயிற்சி செய்தல் கூடாது.

இதயநோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தகுந்த பயிற்சியாளரின் மேற்பார்வையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!