"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Sirasasanam.

70 / 100

திடமான உடலும் கூடவே வளமான மனதும் வேண்டுமெனில் உடலை முறையாக பேணுதல் அவசியம்.

உடலை பேண வேண்டுமெனில் உடலுழைப்புடன் கூடவே முறையான உடற்பயிற்சியும் அவசியம்.

உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டும் பலம் சேர்த்தால் போதாது மனதிற்கும் வளம் சேர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே சிறந்த பயிற்சியாக இருக்க முடியும். அப்படியான பயிற்சிகளில் முதன்மையானது நம்முடைய யோகாசனப்பயிற்சி.

Sirasasana_headstand yoga

ஏனெனில் இது வெளி உறுப்புகளுக்கு மட்டுமல்ல உள்ளுறுப்புகளுக்கும் பயிற்சியளிப்பது. கூடவே மனதிற்கும்கூட.

யோகாசன பயிற்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் உள்ளது என்றாலும் அவை எல்லாவற்றிலும் தலையாய பயிற்சியாக விளங்குவது சிரசாசனமே (Sirasasanam) ஆகும்.

ஆம்… உண்மையிலேயே இது தலையாய பயிற்சிதான்… தலையின் உதவியால் செய்யப்படுவதால் இது  தலையாய பயிற்சி என்னும் சிறப்பை பெறுகிறது.

தலைக்கு “சிரசு” என்று ஒரு பெயருமுண்டு. “எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பது ஔவை மொழி.

தலையை தரையில் ஊன்றி செய்யப்படும் பயிற்சி இதுவென்பதால் இப்பயிற்சிக்கு “சிரசாசனம்” என்று பெயர்.

இந்த சிரசாசனத்திலுள்ள சிறப்பு என்னவென்றால் இது மற்ற அனைத்து ஆசனங்களையும் விட உடலுக்கு அதிக அளவில் நன்மை சேர்ப்பது.

இதன் நன்மைகளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் முதலில் நம்முடைய “தலைமையகத்தை”ப்பற்றி நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.

தலைமையகத்தை பற்றியும் அதற்குள்ளிருந்து செயல்படும் ஆளுநரைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்முடைய ஆளுநரைபற்றி ஓரளவாவது தெரிந்துகொண்டால்தான் சிரசாசனம் நம் உடலிலி ஏற்படுத்தும் நன்மைகளைப்பற்றியும் உங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். 

“ஆளுநர்” என்ற உடன் திரு. “பன்வாரிலால் புரோகித்” (Banwarilal Purohit) அவர்களை கற்பனை செய்துகொள்ளாதீர்கள். அவர் நாட்டை ஆள்பவர்.

ஆனால் நான் சொல்லும் ஆளுநரோ வீட்டை ஆளுபவர். அதாவது உடல் என்னும் கூட்டை ஆளுபவர்.

ஆம்… நான் குறிப்பிடும் ஆளுநர் வேறுயாருமல்ல உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் காரணமாகவுள்ள “பிட்யூட்டரி” (Pituitary) என்னும் நாளமில்லா சுரப்பி.

இந்த “பிட்யூட்டரி”யானது ஆளுநர் என்றால் அவருக்கு பக்கத்தில் ஒரு துணை ஆளுநரும் இருக்கவேண்டுமல்லவா?

இருக்கிறார்…

அவர் பெயர் பினியல் (Pineal).

இவர்கள் இருவரும் இணைந்து நம் உடலில் நல்லதொரு ஆட்சியை கொடுக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.. மொத்த உடலும் வீழ்ச்சியை கண்டுவிடும்.

Pituitary_ Pineal gland

வீழ்ச்சியை சந்திக்கும் அளவிற்கு அப்படி என்னதான்   இருக்கிறது பிட்யூட்டரியில் என்கிறீர்களா?… எல்லாமே இருக்கிறது!!.. வாருங்கள் முதலில் பிட்யூட்டரி என்றால் என்ன என்பது பற்றியும், அதன்பின் சிரசாசனத்தை பற்றியும், இறுதியாக அது நம் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

”எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்றார் மூதறிஞரான நம் ஔவைப்பாட்டி. அத்துணை சிறப்பு பெற்றது நம் மூளை. ஏனெனில் நம்முடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவது மூளையே.

இவ்வுடல் தொடர்ந்து இயங்குவதற்கான அத்தனை கட்டளைகளும் மூளையிலிருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. கட்டளைகள் மூளையிலிருந்து பிறப்பிக்கப்பட்டாலும் அக்கட்டளைகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவை உடலிலுள்ள சுரப்பிகள்தான்.

எனவே உடலின் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் அதில் சுரப்பிகளின் பங்கும் மிகமிக முக்கியமானது.

சுரப்பிகளில் நாளமுள்ள சுரப்பிகள் (endocrine glands), நாளமில்லா சுரப்பிகள் என இருவகையான சுரப்பிகள் இருந்தாலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு நாளமில்லா சுரப்பிகளின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளன.

அதுமட்டுமல்லாது உயிரினங்களின் இனப்பெருக்கம், பாலியல் தூண்டல் முதலியவற்றிற்கும் இதனுடைய பங்களிப்பு மிகமிக அவசியம்.

நம் உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன . அவையாவன –

இந்த சுரப்பிகள் ஒவ்வொன்றும் உடலில் பலவிதமான இயக்கங்களுக்கு இன்றியமையாதவை என்றாலும் பிட்யூட்டரி (ஹைப்போபைஸிஸ்) சுரப்பிக்கே ”தலைமை சுரப்பி” என்கிற கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

“பிட்யூட்டரி சுரப்பி” அல்லது “ஹைப்போபைசிஸ்” என்பது நம் மூளையின் அடிப்பகுதியில் பட்டாணி போன்ற வடிவத்தை கொண்டுள்ள ஒரு சிறிய நாளமில்லா சுரப்பி. இதன் எடை வெறும் 0.5 கிராம் (சுமார் அரை கிராம்) மட்டுமே.

pituitary-gland

வெறும் அளவை வைத்து இதனை குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள்… கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதுபோல மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தியோ பெரியது.

ஏனெனில் உடலிலுள்ள அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்துவதும் இயக்குவதும் இதுதான். இதில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் கடுமையாக பாதிக்கப்படும். எனவேதான் இந்த சுரப்பி “பிரதம சுரப்பி” அல்லது  ”தலைமை சுரப்பி” (Master gland) என்று அழைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பி பாதிப்படைந்தால் உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங்களும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலின் மொத்த இயக்கமும், ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும்.

ஏனெனில் இது உடலின் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ”ஹோமியோஸ்டாஸிஸ்” என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்வதோடு உடலிலுள்ள பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் தூண்டக்கூடிய ”டிரோபிக்” வகை ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. எனவேதான் இதற்கு நாம் “ஆளுநர்” அந்தஸ்த்தையும் அள்ளி கொடுத்துள்ளோம்.

உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் செயல்பட இதுவே தூண்டுதலாக இருப்பதால் இது ”சுரப்பிகளின் தலைவன்” (Master gland) என அழைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை குறைவாக சுரந்தால் பசியின்மை, உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைவு, பெண்களுக்கு பூப்படைதல் தள்ளிப்போதல், மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு முதற்கொண்டு இன்னும் ஏரளாமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 

அதேவேளையில் ஹார்மோனை அதிகமாக சுரந்தாலோ இரத்த அழுத்தம், தலைவலி அதிகரிப்பதோடு பார்வைக் குறைபாடும் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். இன்னும் கணக்கிலடங்காத பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

அதெல்லாம் சரிதான் அதன் பக்கத்திலேயே “துணை ஆளுநர்” போஸ்ட்டில் உட்கார்ந்து இருக்கிறாரே மிஸ்டர் “பினியல்” (Pineal). அதனுடைய பணி இன்னா என்கிறீர்களா?

இந்த பினியல் சுரப்பிக்கும் முக்கியமான பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எமர்ஜென்ஸி காலங்களில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இதற்கு உள்ளது என்றாலும் இதன் முக்கியமான பணி காலநேரம் அறிந்து ”மெலட்டோனின்” என்னும் ஹார்மோனை சுரக்க செய்வதே.

இந்த ஹார்மோனின் உதவியால்தான் நமக்கு அன்றாடம் தேவைப்படும் தூக்கத்தின் கால அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

தூக்கம் இல்லையென்றால் அது நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமல்லவா? எனவே இந்த துணை ஆளுநராக “பினியல்” சுரப்பியும் ஆரோக்கியத்தை கட்டிக்காப்பதில் இரவுபகல் பாராமல் கடுமையாக உழைக்கிறார்.

ஆஹா.. கேக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறதே என்கிறீர்களா? ஆம் இந்த பிரமிப்பை இன்னும் அதிகப்படுத்துவதுதான் நாம் இனி பார்க்கப்போகும் சிரசாசனம்!!

வாவ்… பிரமிப்பை அதிகப்படுத்தும் அளவிற்கு சிரசாசனத்தில் அப்படி என்ன சிறப்பு  இருக்கிறது என்கிறீர்களா?

இருக்கிறது… மேற்குறிப்பிட்டுள்ள பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகளை தொய்வில்லாமல் சிறப்பாக செயலாற்ற தூண்டுவதே இதனுடைய மாபெரும் சிறப்பு.

இன்னாது சிரசாசமானது ஆளுநரையும், துணை ஆளுநரையும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறதா? அது எப்படி?

அது எப்படி என்பதை அறியவேண்டுமென்றால்.. சிரசாசனம் என்றால் என்ன?.. அதனை எப்படி பயிற்சி செய்வது? என்பதனை முதலில் அறிய வேண்டும். வாருங்கள் அறிந்துகொள்வோம்.

“ஆசனம்” என்றால் இருக்கை. “சிரசு” என்றால் தலை. தலையை தரையில் ஊன்றி சிறிதுநேரம் இருப்பதால் இதற்கு “சிரசாசனம்” என்று பெயர்.

Sirsasanam

இப்பயிற்சியால் தலை, கழுத்து முதலிய அவயங்களுக்கும் அதனை சார்ந்த அனைத்து உறுப்புகளுக்கும் அழுத்தம் மற்றும் புதிய ரத்தங்கள் பாய்ச்சப்படுகின்றன.

இப்பயிற்சியால் சோர்ந்து போயிருக்கும் தலையிலுள்ள சுரப்பிகளான “பிட்யூட்டரி” மற்றும் “பினியல்” சுரப்பிகள் இரண்டிற்கும் அழுத்தத்துடன் கூடிய புதிய ரத்தங்கள் பாய்ச்சப்படுவதால் சுறுசுறுப்பாக மாறுகின்றன.

சரி… இனி சிரசாசனத்தை பயிற்சி செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்.

இந்த பயிற்சி  செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு விரிப்பின் மீது ஜமுக்காளத்தை நான்காக மடித்து வைக்கவும்.

அதன் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு இரு கைகளின் விரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்கும் படி தரையில் அமைக்கவும்.

Headstand-hand positions

தலையை அந்த இரு உள்ளங்கைகளுக்கும் இடையில் தரையில் ஊன்றி இரு கைகளையும் தலையின் இருபக்கங்களிலும் முட்டுக்கொடுத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்திக்கொண்டே இடுப்பு, கால்களை மெதுவாக மேல்நோக்கி தூக்கி உடலை நேராக தலைகீழாக நிறுத்தவும்.

உங்களின் உடல் எடையின் பெரும்பகுதியை தலை சுமக்காமல் உங்களின் இரு கைகளுமே தாங்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பகட்டத்தில் நீங்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் இந்த பயிற்சியை மேற்கொண்டீர்கள் என்றால் “பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு” என்பதுபோல உடல் மொத்தமும் ஒரு பக்கமாக சாய்ந்துவிடும்.

எனவே சரியாக செய்ய பழகும்வரை சுவரின் அருகில் அதாவது இரு சுவர்கள் இணையும் முக்குச்சந்தில் நின்று பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். சில வாரங்கள் தொடர்ந்து பழகிவர அதன்பின் சுவரின் துணையில்லாமலேயே தனியாக நின்று பழகும் திறன் வந்துவிடும்.

இந்த ஆசனத்தில் இருக்கும்போது மூச்சை இயல்பாக விடவும். 3 நிமிடம் முதல் 5 நிமிடம்வரை இந்த ஆசனத்தில் இருந்தால் போதுமானது.

3 அல்லது 5 நிமிடம் கடந்த பின்பு ஒவ்வொரு கால்களாக மெதுவாக கீழே இறக்கி சகஜ நிலைக்கு வரவும்.

Sirsasana - Headstand yoga.

இந்த சிரசாசனத்தில் ஈடுபடும்போது கழுத்து, இடுப்பு, கால்கள் என எந்த இடத்தையும் வளைக்காமல் உடல் நேர்கோட்டில் இருக்கவேண்டியது அவசியம். ஆரம்பத்தில் கால்களை மேலே தூக்குவதற்கு கடினமாக இருந்தால் ஒரு நம்பிக்கையான மனிதரின் உதவியை நாடலாம். சில நாட்களில் யாருடைய துணையும் இல்லாமல் தனியாவே பயிற்சி செய்யும் வலிமையை உடல் பெற்றுவிடும்.

இந்த பயிற்சியினால் நாம் முன்பு பார்த்த பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகள் நன்கு அழுத்தப்படுவதோடு நல்ல இரத்த ஒட்டத்தையும் பெறுமாதலால் பிட்யூட்டரி குறைபாட்டால் ஏற்படும் அனைத்து நோய்களையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் இந்த ஆசனத்திற்கு உண்டு. இதுவே இதன் சிறப்பு.

மேலும் இப்பயிற்சியால் கழுத்து, தலைகளிலுள்ள அத்தனை உறுப்புகளுமே பலமாகும். 

தலைவலி, காதுவலி மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும். 

இப்பயிற்சியானது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் முதுகு தசைகளை உறுதியாக்கி முதுகு தண்டையும் பலப்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்புத்திறனையும் அதிகப்படுத்துகிறது.

நுரைஈரலையும் வளப்படுத்தி மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளையும் சீர்செய்கிறது.

யோகாசனம் பயில்பவர்கள் “மாற்று ஆசனம்” என்னும் ஒரு சொற்றொடரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். இப்போது இந்த “மாற்று ஆசனம்” என்பது என்ன என்பதனை பார்ப்போம்….

நீங்கள் யோகாசனங்கள் பயிலும்போது ஒரு குறிப்பிட்ட பயிற்சியில் உங்கள் உடல் ஒரு பக்கமாக வளைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அல்லது திருகப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு அடுத்து செய்யப்படும் ஆசனமானது அதற்கு எதிர்பக்கமாக வளைக்கப்படுவதாக அல்லது திருகப்படுவதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால்தான் அனைத்து உறுப்புகளுக்கும் சரிசமமாக பயிற்சி கொடுத்ததாக அமையும். நரம்பு சுளுக்கு, வலி, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகள் தலைதூக்காமலும் இருக்கும்.

பொதுவாக யோகாசனங்களில் பெரும்பாலான ஆசனங்கள் இரு பக்கங்களிலும் மாறிமாறி பயிற்சி கொடுப்பதாகவே இருக்கும். ஆனால் சில ஆசனங்களுக்கு மட்டும் அப்படி பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு அமைவதில்லை.

அப்படியான ஆசனங்களை பயிற்சி செய்து முடித்தவுடன் அதற்கு எதிரிடையான வகையில் உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பது மிகமிக முக்கியம். அவ்வாறான ஆசனத்தையே “மாற்று ஆசனம்” என்பர்.

மாற்று ஆசனம் என்றால் முந்தைய ஆசனத்திற்கு நேர் எதிரிடையாக, மாற்றாக அதாவது மாறுபட்ட கோணத்தில் உடலை அமைத்து செய்யப்படும் ஆசனம் என்று பொருள்.

அந்த வகையில் இந்த சிரசாசனத்திற்கு மாற்று ஆசனமாக விளங்குவது “ஏகபாத ஆசனம்“.

சிரசாசனத்தில் உடல் தலைகீழாக்கப்பட்டு தலை மற்றும் கழுத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால் உடலிலுள்ள பெரும்பாலான இரத்தமானது தலை, கழுத்துகளை நோக்கி பாயும். அதற்கு அடுத்த ஆசனமாக ஏகபாத ஆசனம் செய்யும்போது சிரசாசனத்துக்கு நேர் எதிராக இரு கால்களுக்கும் மாறிமாறி அதிக அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் சிரசாசனத்தின் மூலமாக தலைக்கு செலுத்தப்பட்டு அங்கு தேங்கி நிற்கும் இரத்தம் மீண்டும் கால்களைநோக்கி இழுக்கப்படும். இதனால் பயிற்சியினால் ஏற்படக்கூடிய சில பக்கவிளைவுகள் தடுக்கப்படும். இதுதான் மாற்று ஆசனத்திற்கான கான்செப்ட்டுங்க.

அதனாலதான் சொல்லுறேன் “சிரசாசனம்” செய்து முடித்தவுடன் அதற்கு அடுத்த ஆசனமாக “ஏகபாத” ஆசனத்தை கண்டிப்பாக செய்யுங்க. அப்படி செய்தால்தான் சிரசாசனத்தின் முழுபலன்களும் உங்களுக்கு கிடைக்கும். சிலவிதமான பக்கவிளைவுகளிலிருந்தும் தப்ப முடியும்.

இதேபோல வேறு சில ஆசனங்களுக்கும் மாற்று ஆசனங்கள் உள்ளன. அவைகள் எவையென்பதனை அறிந்து அதற்கான விதிமுறைகளை தவறாது கடைப்பிடித்து பயனடையுங்கள்.

இப்போதுதான் நீங்கள் யோகா பயிற்சியை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் எடுத்த எடுப்பிலேயே சிரசாசன பயிற்சியில் ஈடுபட வேண்டாம். வேறு பலவிதமான யோக பயிற்சிகளில் ஈடுபட்டு உடலை நன்கு பண்படுத்தியபின்  சிரசாசன பயிற்சியில் ஈடுபடலாம்.

சிரசாசன பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்னால் ஓரிரு மாதங்கள் “அர்த்த சிரசாசனம்” என்னும் பயிற்சியில் நன்கு தேர்ச்சிபெற்று அதன்பின் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

headstand yoga

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது.

உணவு உண்டவுடனோ அல்லது வயிற்றில் உணவு நிரம்பியிருக்கும் சமயத்திலோ இந்த பயிற்சியை செய்யக்கூடாது. இப்பயிற்சியில் ஈடுபடும்போது வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

கழுத்துவலி, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் கண்டிப்பாக சிரசாசன பயிற்சியில் ஈடுபட கூடாது.

இரத்த அழுத்தம் மற்றும் கண் அழுத்த நோய்களுடன் பல்வலி, மூட்டுவலி, இதயம், சிறுநீரக கோளாறு மற்றும் குடலிறக்க பிரச்னை உள்ளவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது.

மேலும் அதிக உடல் எடை கொண்டவர்கள் இப்பயிற்சி செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும் இப்பயிற்சியில் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இந்த ஆசனத்தை பயிற்சி செய்யும்போது கழுத்தில் வலி தோன்றினால் உடனடியாக ஆசனம் செய்வதை நிறுத்திவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!