"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Nadi Shuddhi.

15 / 100

“ஓம் பூர்: புவ: ஸீவஹ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்”

மேலே நீங்கள் காண்பது மந்திரம்..

ஆம், உங்கள் யூகம் சரிதான்.. காயத்ரி மந்திரம்.

வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார் பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அந்த அளவிற்கு காயத்ரி மந்திரம் சகல சௌபாக்கியங்களையும் தரும் ஒலிவடிவம் என கூறப்படுகிறது.

Gayaththiri manthiram

இவ்வளவு சிறப்பு பெற்ற இதை உருவாக்கியவர் யார் தெரியுமோ?

பிரம்ம ரிஷி என பெயர்பெற்ற “விஸ்வாமித்ரர்“.

இந்த காயத்ரி மந்திரத்தால் நமக்கு என்ன பயன்?..

பயன் இருப்பதாகவே கூறப்படுகிறது. மந்திரத்தால் அல்ல.. அதில் இருந்து புறப்படும் ஒலி அதிர்வுகளால்..

என்னவிதமான பயன் ஏற்படுகிறதாம்?..

மன அழுத்தம் குறைகிறதாம். இதன் ஒலிவடிவத்தை தொடர்ந்து கேட்பதால் மனதில் ஒருவித விழிப்பும், எழுச்சியும் உருவாகிறதாம்.. இதனால் உடலில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்பட்டு நோயில்லா பெருவாழ்வு, அதனால் சகல சௌபாக்கியமும் கிட்டுகிறதாம்.

அட.. இதெல்லாம் உண்மைதானா என்றால்… பதில்சொல்ல தெரியவில்லை… இதெல்லாம் வெறும் யூகம், கற்பனைகள்தான்.. அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

நோயில்லா பெருவாழ்வு கிடைக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் பிறகு பார்க்கலாம்… தற்போது மக்களை பாடாய்படுத்தும் கொரோனாவை குணப்படுத்தும் திறன் இதற்கு இருக்கிறதா? என்று நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள் என்றால்..

உங்களுக்கான பதில்… தற்போது அதுபற்றிய ஆராய்ச்சியை மத்திய அரசு உதவியுடன் “எய்ம்ஸ்” விஞ்ஞானிகள் நடத்தி கொண்டு இருக்கின்றனராம். வரலாற்று சிறப்புமிக்க இதன் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவர [இன்னா நைனா சொன்னீங்க.. வரலாற்று சிறப்புமிக்க ஆராய்ச்சி முடிவுகளா?.. ஷப்பா.. இப்பவே கண்ணகட்டுதே] வெகுகாலம் ஆகலாம்..

அதுவரை நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?..

கவலையை விடுங்கள்… மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா இருப்பான்.

உங்கள் கவலையை தீர்க்க இந்த கலியுகத்திலும் சிரமம் பாராது சகல லோகங்களும் பயன்படும்படியாக காயத்ரி மந்திரத்தை உருவாக்கிய அந்த விஸ்வாமித்திரரே மறு அவதாரம் எடுத்து வந்துள்ள உண்மை உங்களுக்கு தெரியுமா?

அவதாரம் எடுத்தது மட்டுமல்லாமல் தான் இயற்றிய காயத்ரி மந்திராவில் கொரோனாவை குணப்படுத்தும் ஸ்லோகம் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய காயத்ரி மந்திராவை லேட்டஸ்ட் வெர்சனுடன் அப்டேட் செய்துள்ள விஷயம் உங்களுக்கு தெரியுமா?

மக்கள்படும் துயரத்தை காண்பதற்கு சகிக்காமல் விஸ்வாமித்திரரே மறு அவதாரம் எடுத்துவந்தது மட்டும் அல்லாமல் கொரோனாவை அழித்தொழிக்கும் ஸ்லோகம் இல்லாத குறையை நிவர்த்திசெய்து அண்மையில் அதனை அப்டேட் செய்த செய்தி பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரையும் நெகிழ்ச்சியடையவும் செய்துள்ளது.

விஸ்வாமித்திரரின் மறு அவதாரமாக திகழும் அந்த புண்ணியவான் வேறு யாருமல்ல மக்களின் வேதனையை தீர்க்க மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள “ராமதாஸ் அத்வாலே” (Ramdas Bandu Athawale) தான்..

Reincarnation of Vishvamitra

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் அவதரித்துள்ள இவரின் கொரோனாவை விரட்டும் லேட்டஸ்ட் “அப்டேட் காயத்ரி” மந்திரம் இதோ..

“corona go corona go

go corona: go corona

go corona corona go go,

go go corona: corona go”

வடநாட்டை வாழவைக்க வந்த விஷ்வாமித்திரர் நம் தமிழ்நாட்டு மக்களை மட்டும் விட்டுவிடுவாரா என்ன.. அவரின் கருணைப் பார்வை தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளதால் இதில் தமிழ் வெர்சனும் தற்போது வந்துள்ளது. உங்கள் நன்மைக்காக அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“கொரோனா கோ கொரோனா கோ

கோ கொரோனா: கோ கொரோனா

கோ கொரோனா கொரோனா கோ கோ,

கோ கோ கொரோனா: கொரோனா கோ”

corona go corona go

அர்த்தராத்திரியில் விளக்கேற்றி கும்மிகொட்டியதெல்லாம் போதாது என்று… கையில்கிடைத்த பானை சட்டி தட்டுமுட்டு சாமானையெல்லாம் தட்டியும் போகாத கொரோனா… இந்த கொரோனா மந்திரம் ஒலிக்க துவங்கியவுடன்.. இந்தியாவை விட்டே ஒட்டம்பிடிக்க… வியந்தே போனது பாரத மணித்திருநாடு.. என்னே மந்திரத்தின் மகிமை..

corona music

மந்திரத்தால் கொரோனாவை விரட்டிய வெற்றிக்களிப்பில் மகிழ்ந்துபோன மக்கள் மகிழுந்தில் உல்லாசமாக உலாவந்தது மட்டுமல்லாமல் ஊர்கூடி ஒன்றாக “தேர்தல் திருவிழா“வினையும் நடத்திமுடித்த கையோடு வெற்றிக்களிப்பில் மிதந்திருந்த வேளையில்தான் இடியாய் வந்து இறங்கியது அந்த செய்தி..

ஆம்,. கொரோனாவின் இரண்டாவது அலை..

கொரோனா தன்னுடைய இரண்டாவது அலை என்னும் கோர முகத்தை காட்டி இந்திய மக்களை வேட்டையாட தொடங்கியது.

எங்கும் மரண ஓலம். பிணங்கள் எரியும் காட்சி.

அதிர்ச்சியில் உறைந்து போயினர் மக்கள்.

முதல் அலையை முடக்கிப்போட்ட விஸ்வாமித்திரர் இதற்கு என்ன செய்யப்போகிறார் என்று அவருடைய திருமுகத்தை அனைவருமே ஒருமுகமாக பார்க்க.. சும்மாயிருப்பாரா நம்முடைய விஸ்வாமித்திரர் வெகுண்டெழுந்துவிட்டார் .

முதல் அலையை முடக்கிப்போட்ட தன்னுடைய “go go” மந்திரம் இரண்டாம் அலையிடம் தாவாக்கட்டை பிஞ்சுபோய் பல்லிளித்துகொண்டு நிற்பதை பார்க்க சகிக்காமல் இதோ இரண்டாம் அலைக்கான லேட்டஸ்ட் வெர்சனையும் அப்டேட் செய்துவிட்டார்.

ஒரு சின்ன மாற்றம் மட்டும்தான். “go” விற்கு பதிலாக “no” போட்டால் போதுமாம். அதாவது முன்னது “Go Go” மந்திரம் என்றால் பின்னது “NO NO” மந்திரம். அவ்வளவுதான் ரொம்ப சிம்பிள்… கொரோனா போயேபோச்சு!!..

மக்கள் நலன் கருதி அதையும் கீழே பிரசுரித்துள்ளோம். தினம் மூவேளை ஓதி பயன்பெறுங்கள்.

“corona no corona no

no corona: no corona

no corona corona no no,

no no corona: corona no”

“கொரோனா நோ கொரோனா நோ

நோ கொரோனா: நோ கொரோனா

நோ கொரோனா கொரோனா நோ நோ,

நோ நோ கொரோனா: கொரோனா நோ”

ஆஹா! மந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்க இரண்டாவது அலையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி ரொம்பகாலம் நீடிக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் புயலை கிளப்புகிறது… ஏனென்றால் அடுத்து வரவிருக்கும் மூன்றாவது அலை.

இரண்டாவது அலை வந்தபோது முதல் மந்திரம் பல்லிளித்ததுபோல் மூன்றாவது அலை வரும்போது இரண்டாவது மந்திரம் பல்லிளித்துவிட்டால் என்ன செய்ய..

கஷ்டம்தான்..

சரி.. மூன்றாவது அலைக்கான அப்டேட் வெர்சனை நவீன விஸ்வாமித்திரரே பார்த்துக்கொள்ளட்டும்..

நாம் தற்போது எத்தனை அலைகள் வந்தாலும் அத்தனையையும் எதிர்த்து நிற்கும் அளவிற்கு உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கு மந்திரத்தை தவிர்த்து வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தால்.. நம் முன்னே வந்து நிற்கிறது “நாடி சுத்தி” என்னும் சுவாசப்பயிற்சி.

ஆம்,. எத்தனை பெரிய தொற்றுநோய் கிருமியாக இருந்தாலும் அத்தனை கிருமிகளையும் துவம்சம் செய்கிற அளவிற்கு நுரைஈரலையும், உடலையும் வைரம்பாய்ந்த தேக்காக மாற்றியமைக்கும் ஒரே பயிற்சி இந்த நாடி சுத்தி மட்டும்தான்.

இந்த காலக்கட்டத்தில் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய… பயிற்சி செய்ய வேண்டிய… மகத்தான பயிற்சியும் கூட.

வாருங்கள் கற்றுக்கொள்வோம்… கொரானாவை வெற்றிகொள்வோம்.

நம் உடல் ஆரோக்கியாக இயங்கவேண்டுமென்றால் நம் உடலிலுள்ள இரத்தம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இயங்கும் விதத்திலும் இருக்க வேண்டும்.

இரத்தம் சுறுசுறுப்பாக இயங்கவேண்டுமெனில் அதற்கு ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்கவேண்டும், ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்கவேண்டுமெனில் நுரைஈரல் நன்கு முழுஅளவு விரிந்து அதிகப்படியான காற்றை உள்ளுக்குள் கிரகிக்க வேண்டும்.

அவ்வாறு, முழு அளவில் இயங்க அதற்கு பயிற்சி அளிப்பதே நாடிசுத்தி பயிற்சியின் முழு நோக்கம். நுரைஈரலுக்கு பயிற்சி கொடுப்பது எப்படி என்பதனை பார்ப்போம்.

பொதுவாக இந்த மூச்சுப்பயிற்சி “பிராணயாமம்” என்னும் பெயரில் சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. இதில் “பிராணன்” என்பது உயிர்சக்தியாகிய ஜீவ சக்தியை குறிக்கும். “யாமம்” என்பது நீட்டித்தல் என்று பொருள்படும். அதாவது உயிர் இந்த உடலில் தங்கும் காலஅளவை நீட்டித்தல் என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் (மூச்சுப்பயிற்சியில்) பலவகையான பயிற்சிகள் இருக்கின்றன. அவையாவன:-

  1. பஸ்திரிகா
  2.  சூரிய பேதனா
  3.  சந்திர பேதனா
  4.  நாடி சுத்தி
  5.  உஜ்ஜாயி
  6.  சிட்டகாரி
  7.  சீதாளி
  8.  பிரம்காரி
  9.  கபாலபதி

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பயிற்சிகளும் மூச்சை இழுத்து வெளிவிடும் தன்மையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன.

நாம் இப்பதிவில் “நாடிசுத்தி” என்னும் பயிற்சி பற்றி மட்டுமே பார்க்கயிருக்கிறோம். பிற மூச்சு பயிற்சிகளைப்பற்றி இனி வரவிருக்கும் “பிராணாயாமம்” என்னும் பதிவின்கீழ் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக தியானப்பயிற்சி செய்வதற்கு முன்னால் பிராணாயாம பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது பொது விதி.

பொதுவாக பிராணாயாமம் பயிற்சியானது 3 பகுதிகளை கொண்டுள்ளன. அவை

  1. பூரகம்.
  2. கும்பகம்.
  3. ரேசகம்.

இதில் பூரகம் என்பது மூச்சுக்காற்றை உள் இழுப்பதை குறிக்கும்.

கும்பகம் என்பது உள்ளுக்கு இழுத்த மூச்சுக்காற்றை உள்ளேயே சிறிதுநேரம் அடக்கிவைப்பதை குறிக்கும்.

ரேசகம் என்பது அடக்கிவைத்த காற்றை நிதானமாக வெளியிடுவதை குறிக்கும்.

ஏற்கனவே சொன்னதுபோல மூச்சுப்பயிற்சியில் பலவகையான பயிற்சிகள் இருந்தபோதிலும் நாம் அனைத்துப்பயிற்சிகளையும் இந்த சிறிய பதிவில் பார்க்கப்போவதில்லை. இங்கே பார்க்கப்போவது நாடி சுத்தி என்னும் மூச்சுப்பயிற்சியைப் மட்டும்தான்.

இந்த பயிற்சியில் “பூரகம்” மற்றும் “ரேசகம்” என்னும் இரண்டு மட்டுமே பயிற்சிசெய்யப்படுகின்றன. “கும்பகம்” அனுஷ்ட்டிக்கப்படுவதில்லை. அதாவது இப்பயிற்சியில் நிதானமாக மூச்சுக்காற்றை உள்ளுக்கிழுத்து அடுத்த வினாடி அந்த காற்றை நிதானமாக வெளியிடுவதே நாடிசுத்தி. இதில் மூச்சை உள்ளுக்குள்ளேயே தடுத்து நிறுத்தும் கும்பகம் செய்யப்படுவதில்லை. 

சரி.. இனி நாடிசுத்தி பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.

Nadi Shodhana Pranayama

ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து போட்டு அதன்மீது பத்மாசனம் நிலையில் உட்காரவும். பத்மாசன நிலையில் உட்கார முடியாதவர்கள் சோமாசனம், ஸ்வஸ்திகாசனம் அல்லது சுகாசனத்தில் உட்காரலாம். எந்த ஆசனத்தில் உட்கார்ந்தாலும் பயிற்சியின்போது உடல் கூன்விழாமல் நிமிர்ந்த நிலையில் நேராக இருக்கவேண்டுமென்பது மிக மிக முக்கியம்.

தியானத்திற்காக பயன்படுத்தப்படும் எதாவது ஒரு ஆசனத்தில் உடல் வளையாமல் நேராக உட்கார்ந்துகொண்டு இடதுகையை இடது தொடைமீது வைத்துக்கொள்ளவும்.

வலது கை பெருவிரலால் வலதுநாசியை அடைத்துக்கொண்டு இடதுபக்க நாசியின் வழியாக ஒலியெழுப்பாமல் நிதானமாக மெதுவாக மூச்சை உள்ளிக்கிழுத்து காற்றால் நுரைஈரலை நிரப்பவும்.

அதன்பின் உடனே வலதுகையின் மோதிரவிரல் அல்லது சுண்டுவிரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின்வழியாக காற்றை மிக மிக மெதுவாக ஒரே சீராக வெளியேவிடவும். அதாவது இடது நாசி வழியாக மூச்சை எவ்வளவு நேரம் உள்ளே இழுத்தீர்களோ அதற்கு இரண்டு பங்கு நேர அளவு மூச்சை வெளியேவிட எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது காற்றை உள்ளே இழுக்க 8 செகண்ட் எடுத்துக்கொண்டீர்கள் எனில் வெளியே விட 16 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

இனி காற்றை வெளியேவிட்ட அதே வலதுநாசியின் வழியாக மூச்சை ஒரேசீராக 8 செகண்ட் நேர அளவில் உள்ளே இழுக்கவும்.

அதன்பின் வலது நாசியை அடைத்து இடதுநாசியின் வழியாக 16 செகண்ட் நேரம் அளவில் ஒரேசீராக நிதானமாக காற்றை வெளியே விடவும்.

இது ஒரு சுற்று.

Nadi Shuddhi tamil

இதுபோல இரண்டு நாசியிலும் மாறிமாறி 10 முதல் 20 சுற்று செய்யவும். இதுவே நாடிசுத்தி. மூச்சை உள்ளே இழுப்பது மற்றும் வெளியே விடுவதற்கான அளவான 1 : 2 என்னும் காலஅளவை மிக சரியாக கடைபிடிக்கவேண்டும் என்பது மிக முக்கியம்.

இந்த நாடிசுத்தியை ஒரு நாளைக்கு இருதடவை செய்துவரலாம். ஆசனம் செய்வதற்கு முன்போ அல்லது ஆசனம் செய்த பின்போ பயிற்சி செய்யலாம்.

நுரைஈரல் பலம்பெறும். இரத்தம் சுத்தியாகும். நன்கு பசியெடுக்கும். கண்கள் ஒளிபெறும். மனதில் சுறுசுறுப்பது பெருகும். உடலில் இளமை நீடிக்கும்.

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி பெருகும். முக்கியமாக நவீன விஷ்வாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யாமலேயே கொரானா போயே போச்சு…. ஜிம்பலக்கடி ஜீ பூம்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!